இலங்கை அதிபர் ராஜபட்ச. உலகத் தலைவர்கள் வந்து உண்மை நிலையை பார்வையிட வேண்டும் என வலியுறுத்தல் இலங்கை அதிபர் ராஜபட்ச. உலகத் தலைவர்கள் வந்து உண்மை நிலையை பார்வையிட வேண்டும் என வலியுறுத்தல்

உலகத் தலைவர்கள் இலங்கைக்கு வந்து, போருக்குப் பிந்தைய நிலையை பார்வையிட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபட்ச வலியுறுத்தினார்.

போர்ச்சுகல் பிரதமர் பெட்ரோ பாசோஸ் கோயல்ஹோ, இலங்கையில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை ராஜபட்சவை சந்தித்துப் பேசினார்.

அதன் பிறகு ராஜபட்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நடந்த போரில் நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரால் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆற நீண்ட நாள்களாகும்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் போருக்குப் பின் இங்கு நிலவும் உண்மை நிலவரத்தைக் கண்டு வியப்படைந்தனர்.

போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்குப் பகுதியில் அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு காரணமாக அப்பகுதிகளில் 20 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ராஜபட்ச தெரிவித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் ரசாயன குண்டுகள் வீசி கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப்போரின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக இலங்கை மீது ஐ.நா. பொதுச் சபையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது.

ஆசிரியர்