செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கச்சதீவு- யாழ்ப்பாணம் | சில்லறைத்தனமான உரையும், கவர்ச்சி அரசியலும் | அ. நிக்ஸன்

கச்சதீவு- யாழ்ப்பாணம் | சில்லறைத்தனமான உரையும், கவர்ச்சி அரசியலும் | அ. நிக்ஸன்

2 minutes read

* சிங்கள சமூகவலைத் தளங்களின் எதிர்மறை பார்வை

* தமிழர்களின் (Core Issues) திசை திருப்பப்படும் ஆபத்து!

* சமூக வலைத்தள ‘வைரல்’ மாத்திரம் பிரதான நோக்கம்.

— — —

இலங்கை நாடாளுமன்றம் என்பது கட்டமைப்பிலேயே சிங்களப் பெரும்பான்மை வாதத்தை நிலைநிறுத்தும் ஓர் ஒற்றையாட்சித் தளமாகும்.

இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளுக்கான முழுமையான தீர்வு அந்தச் சபைக்குள்ளிருந்து கிடைத்துவிடும் என்பது யதார்த்தத்திற்குப் புறம்பானது.

இருந்தபோதிலும், தமிழ் பிரதிநிதிகள் அந்தத் தளத்தை ஒரு சர்வதேச மற்றும் தேசிய அரசியல் களமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெறும் சில்லறைத் தனமான உரைகள், உணர்ச்சியை தூண்டும் உரைகளில் காலத்தைக் கடத்தாமல், “சுயநிர்ணய உரிமை” என்பதை மையப் பொருளாகக் கொண்ட அரசியல் தீர்வு, எமது “தாயக காணி உரிமை” – “தேசிய இன அங்கீகாரம்” போன்ற ஆழமான அம்சங்களை சபையின் பேசுபொருளாக எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

நாடாளுமன்ற ஹன்சாட் பதிவுகளில் இடம்பெறும் இத்தகைய தீர்க்கமான வாதங்களே எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான சர்வதேச நகர்வுகளுக்குப் பலமான ஆவணங்களாக அமையும்.

ஆகவே, எவ்வித சூழலிலும் சமரசம் செய்து கொள்ள முடியாத ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் அடிப்படைக் கோட்பாடுகளே மக்கள் பிரதிநிதிகளின் முதன்மையான மற்றும் பிரதான இலக்காக அமைய வேண்டும்.

ஆனால், உண்மையான மக்கள் நலன் அல்லது கொள்கை ரீதியான தீர்வுகளை விட, தன் மீதான கவனத்தை மாத்திரம் ஈர்ப்பதற்காகவும் (Attention), பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒரு சில தமிழ் பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர்.

இவர்கள் நாடாளுமன்றத்தில் அதிரடியான, உள்ளடக்கம் அற்ற கருத்துக்களைப் பேசி, அதனை மக்களிடம் பேசுபொருளாகும் நோக்கில் அதாவது, தற்காலிகப் புகழுக்காக பரபரப்பான கருத்துக்களை முன்வைத்து கவர்ச்சி அரசியலில் (Glamor Politics) ஈடுபடுகின்றனர்.

உரையின் உள்ளடக்கத்தில் வலுவில்லாமல், வெளிப்பகட்டுக்காகப் பேசும் போலித் தூண்டல் அவை. அந்த உரையில் திட்டமோ அல்லது தீர்வோ இருக்காது.

சில்லறைத்தனமான உரைகள், ஈழத் தமிழர் அரசியல் போராட்டத்தின் மையக் கோட்பாடுகளை (Core Principles) திசை திருப்பி, பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

அரசியல் தீர்வு (Core Issues) என்ற பிரதான இலக்கை வேறு பக்கத்துக்கு அது திசை திருப்பிடும்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நாடாளுமன்ற உரைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருப்பதை விடவும், சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ (Viral) ஆவதையே நோக்கமாகக் கொண்டிருப்பது பெரும் துயரம்.

சமூக ஊடகங்களில் கிடைக்கும் ‘லைக்’குகளும் (Likes), ‘ஷேர்’களும் (Shares) ஒருபோதும் அரசியல் தீர்வாகாது.

மாறாக, இத்தகைய முதிர்ச்சியற்ற உரைகள் தமிழர்களின் நியாயங்களை (Justifications/Rights) தடம் மாறச் செய்து, சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாதகமான ஆயுதமாக மாறிவிடும்.

“கச்சதீவு மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்தையும் கொடுத்து விடுங்கள்” என்ற நாடாளுமன்ற உரைக்கு, சிங்கள சமூக வலைத்தளங்களில் கண்டம் எழுகிறது.

அதாவது, எதிர்மறை விளைவுக்கான (Counter-productive) தொனி தெரிகிறது.

ஆகவே, தெளிவான அரசியல் தரிசனமும், ஆழமான தர்க்கமும் கொண்ட உரைகளே ஒரு இனத்தின் விடுதலை நோக்கிய பாதையைச் செப்பனிடும்.

கூட்டுரிமை (Collective Rights) முக்கியமானது.

ஆனால், “உள்ளடக்கமற்ற கவர்ச்சி உரைகள்” ஓர் இனத்தின் நீண்டகால அரசியல் இலக்குகளைச் சிதைத்துவிடும்.

தமிழர்களின் அரசியல் விடுதலை என்பது ‘ட்ரெண்டிங்’ (Trending) ஆவதற்காக நடக்கும் போராட்டமல்ல, அது வாழ்வுரிமைப் போராட்டம்.

ஆகவே, சமூக ஊடகப் பரபரப்பைத் தவிர்த்து (Social Media Hype) ஆழமான அரசியல் அறிவோடும் (Political Intellectualism) தூரநோக்கோடும் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதே இன்றைய அவசிய தேவையாகும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.