செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குஜராத்தை 29 ஓட்டங்களால் வென்றது கொல்கத்தா

குஜராத்தை 29 ஓட்டங்களால் வென்றது கொல்கத்தா

2 minutes read

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (16) இரவு நடைபெற்ற மிக முக்கிய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 29 ஓட்டங்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிகொண்டது.

பின் அலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, கெமரன் க்றீன் ஆகியோர் குவித்த அதிரடி அரைச் சதங்களின் பங்களிப்போடு வெற்றியீட்டியபோதிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ப்ளே ஓவ் வாய்ப்பு ஊசலாடிய வண்ணம் இருக்கிறது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 புள்ளிகளுன் 7ஆம் இடத்தில் இருக்கிறது.

கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிகூடிய மொத்த எண்ணிக்யை குவித்த அணி என்ற மைல்கல் சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிலைநாட்டியது.

அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (14) குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.

ஆனால், பின் அலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, கெமரன் க்றீன் ஆகிய மூவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸை பலமான நிலையில் இட்டனர்.

இரண்டாவது விக்கெட்டில் பின் அலனுடன் 41 பந்துகளில் 95 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் கெமரன் க்றீனுடன் 53 பந்துகளில் 112 ஓட்டங்களையும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி பகிர்ந்தார்.

பின் அலன் 35 பந்துகளில் 4 பவுண்டறிகள், 10 சிக்ஸ்களுடன் 93 ஓட்டங்களைக் குவித்தார்.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 82 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 28 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 52 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சாய் சுதர்சன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 3 ஓவர்கள் நிறைவில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த சாய் சுதர்மன் உபாதை காரணமாக ஓய்வறைக்கு திரும்பினார்.

இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

அடுத்து களம் புகுந்த நிஷாந்த் சிந்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (49 – 1 விக்.)

தொடர்ந்து ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 73 பந்துகளில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

ஷுப்மான் கில் 49 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் சாய் சுதர்சன் மீண்டும் களம் புகுந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜொஸ் பட்லர் 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

சாய் சுதர்சன் 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இப் போட்டியில் விளையாடிய மதீஷ பத்திரண தனது 2ஆவது ஓவரில் உபாதைக்குள்ளாகி வெளியேற அவரது ஓவரை சௌராப் டுபே பூர்த்திசெய்தார்.

பந்துவீச்சில் சுனில் நரேன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகனானார்.

இன்று இரண்டு போட்டிகள்

அணிகள் நிலையில் 16 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் 13 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தரம்சாலாவில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிபெற்றால் முதலாவது அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இதேவேளை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் இடையிலான மற்றொரு போட்டி டெல்லியில்  இன்று  இரவு நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.