பண்டைய மனிதர்கள் சுமார் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தீயை உருவாக்கும் திறனை கற்றிருந்திருக்கலாம் என இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான முக்கிய ஆதாரங்களை அவர்கள் இங்கிலாந்தின் சுஃபோல்க் (Suffolk) பகுதியில் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை மனிதர்கள் சுமார் 3.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் நெருப்பை உருவாக்கத் தொடங்கினர் என்றே அறிவியல் உலகம் நம்பி வந்தது. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பு அந்தக் காலக்கணிப்பை மேலும் பின்னோக்கி நகர்த்துகிறது.
“பிரிட்டிஷ் அருங்காட்சியகம்” தலைமையிலான ஆய்வுக் குழு, அப்பகுதியில் களிமண் மற்றும் எரிகல் துண்டுகள் உள்ளிட்ட பல பொருள்களை கண்டுபிடித்துள்ளது. அவை இயற்கையாக ஏற்பட்ட காட்டுத்தீயின் விளைவாக அல்ல என்பதை உறுதிப்படுத்த ஆய்வாளர்கள் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் தீ பயன்படுத்தப்பட்டதற்கான சுவடுகள் காணப்பட்டதாகவும், இதன்மூலம் பண்டைய மனிதர்கள் தாமாகவே தீயை உண்டாக்கியிருப்பது உறுதியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு மனிதப் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ள மிக முக்கியமானதாகும். குளிர்காலத்தில் உயிர்வாழ, உணவை சமைக்க, விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு பெற ஆகிய தேவைகளுக்கு தீ முக்கிய பங்காற்றியதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
தீயை உருவாக்கும் திறன் கிடைக்கும் முன்பு, மனிதர்கள் மின்னல் அல்லது இயற்கை காட்டுத்தீயிலிருந்து கிடைத்த நெருப்பை மட்டுமே நம்பியிருந்தனர் என்றும் இந்த ஆய்வு நினைவூட்டுகிறது.