March 26, 2023 11:53 pm

கருப்பு அப்பா | ஒரு பக்க கதை | கதிர்ஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை அழைத்தார்.

“இன்ணைக்கும் நீ பேரண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வரலியா?” டீச்சரின் கேள்வியால் தலை குனிந்தான் முத்து.

சுண்டினால் சிவக்கும் செம்மேனி உடைய தன் வகுப்புத் தோழர்களின் அப்பாக்களோடு, கருத்த மேனியும் தும்பையாய் வெளுத்த தலையுமாய் இருக்கும் தன் அப்பாவை ஒப்பிட்டு… அதனால் தாழ்வு மனப்பான்மை முத்துவுக்கு.

‘நான் என்ன பாவம் பண்ணினேன்… எனக்கு மட்டும் ஏன் அட்டைக் கரியில் இப்படி ஒரு அப்பா..?’ என்ற வேதனையோடு வீடு திரும்பிய முத்துவுக்கு அதிர்ச்சி.

அந்த குப்பத்திலேயே சிறிய அந்த ஓலைக் குடிசை முன் கலெக்டரின் சைரன் வைத்த கார். ஆங்காங்கே நின்றிருந்த அரசு அலுவலர்கள்.

என்னமோ ஏதோ என்று பதட்டத்துடன் குடிசை அருகே வந்தான் முத்து.

“நாளைக்கு டவுன்ல அமைச்சர்தலைமையில் அரசு விழா நடக்க இருக்குது. அதுல இயற்கை விவசாயத்தில் நிறைய சாதனையும், விவசாயத்துல புதுப் புரட்சியும் செய்து மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கற உங்களைப் பாராட்டி கொரவிக்க இருக்கோம்… அதுக்கு ஸ்பெஷலா வெல்கம் பண்ண அமைச்சர் சார்பா நான் வந்திருக்கேன் ஐயா…” என்று முத்துவின் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் கலெக்டர்.

முத்துவின் மனதில் இப்போது கருப்பு வைரமாய் ஜொலிக்க ஆரம்பித்தார் அவனின் அப்பா.

– கதிர்ஸ் – பிப்-16-28-2021 

நன்றி : சிறுகதைகள்.காம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்