December 2, 2023 9:38 pm

நல்லூரில் சனநெரிசல்! பலர் மயக்கம்!! – வீதித்தடை உடைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் இன்று இரவு ஏற்பட்ட சனநெரிசலால் பலர் மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் பலரின் நகைகளும் களவாடப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா உற்சவம் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது நாடெங்கிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஆலயத்தின் சுற்று வீதிகளில் வீதித்தடை அமைக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நல்லூர் ஆலயப் பின் பகுதியில் பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் மற்றைய பாதையான சிவன் கோயில் பாதையிலும் சனநெரிசலுக்கு மத்தியிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாத நிலையில் சனநெரிசலில் சிக்கிப் பலர் மயக்கமுற்றனர். அவர்கள் யாழ். மாநகர சபை சுகாதாரப் பகுதி அலுவலகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டனர். வைத்தியர்கள் அம்புலன்ஸ் ஊடாக அழைத்து வரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும் சன நெரிசலில் கர்ப்பிணிப் பெண்கள் இருவர் சிக்கிய நிலையில் அவர்கள் யாழ். மாநகர சபை சுகாதாரப் பகுதி அலுவகத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் சனநெரிசலால் பல சிறுவர்கள் பெற்றோரால் தவறவிடப்பட்டனர்.

இந்நிலையில் வீதித்தடை பகுதிகளில் ஏற்பட்ட சனநெருக்கடியைச் சாதகமாகப் பயன்படுத்திய விஷமிகள் அங்கச் சேட்டையில் ஈடுபட்டதுடன், திருடர்கள் பெருமளவு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டனர். திருடர்களில் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவான நகைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.

சனநெரிசல் உள்ள பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோயில் முன்றலில் ஆலய நிர்வாகத்தினரால் போடப்பட்ட வீதித் தடைகளைத் தளர்த்தி பக்தர்கள் செல்ல வழியேற்படுத்தினர்.

இதேவேளை, நல்லூர் பின் வீதியில் சனநெரிசல் அதிகரித்த நிலையில், பருத்தித்துறை வீதியை மறித்து ஆலய நிர்வாகத்தினரால் போடப்பட்ட இரும்புத் தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையை ஆத்திரமடைந்த இளைஞர்கள் உடைத்தனர்.

நல்லூர் திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது பருத்தித்துறை வீதித் தடையை நீக்குவது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், அது தங்களின் கைகளில் இல்லை எனவும், ஆலய நிர்வாகத்தினரின் முடிவு எனவும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்திருந்தார்.

சப்பரத் திருவிழாவிலேயே இவ்வாறான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் நாளைய தேர்த் திருவிழாவில் நிலைமை மோசமாகும் எனவும், எனவே யாழ். மாநகர சபை காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்