செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூட்டமைப்பாக மீண்டும் செயற்பட தமிழரசின் கதவு திறந்தே உள்ளது! – சி.வி.கே. தெரிவிப்பு

கூட்டமைப்பாக மீண்டும் செயற்பட தமிழரசின் கதவு திறந்தே உள்ளது! – சி.வி.கே. தெரிவிப்பு

2 minutes read
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன என்று அந்தக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்திருந்தோம். ஆனால், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித் தனியாகப் போட்டியிட்டு கூட்டாக செயற்படுவது என்று தமிழரசுக் கட்சி தீர்மானித்தது. அதைத் தவறாகச்  சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன.

நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்போது கூட முன்னரைப் போல் மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குதவற்கான அழைப்பையே விடுத்திருக்கின்றோம்.

அந்த முயற்சியின் தொடராகக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றேன். ஆனால். அந்தக்  கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்தபோது சாதகமாகப் பரிசீலிப்பதாகச் சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர்.

இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கின்றது எனில் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் அவர்களிண் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால், அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைத்தான் நான் சொல்லி இருக்கின்றேன்.

தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும், எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்குக்  கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது? நாங்கள் ஒன்றும் சில்லறைக் கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது.

ஈழத் தமிழினத்துக்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பாக இயங்குவோம் வாருங்கள் என்றே இணக்கத்தின் அடிப்படையில் அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாகச்  சொல்லவில்லை.

இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித்தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனால், நாங்கள் இப்போதும் கூறுகின்றோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்புக்கு வருவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.

அவர்கள் வராவிட்டால் தமிழரசுக் கட்சி மீண்டும் தனி வழியில் போவது இயல்பானது. ஆனாலும், தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

அதற்காக எங்களுக்குப் பயம் என்றில்லை. தந்தை வழியில் வந்தவன் நான். தேசியத் தலைவரின் கொள்கையில் நிற்கின்றேன். எனக்குப் பயம் கிடையாது. ஆனால், தமிழர் நலன் சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில்தான் சில முயற்சிகளை எடுத்துச் செயற்படுகின்றோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More