செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் | அருண ஜெயசேகர

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் | அருண ஜெயசேகர

2 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவை என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய கூட்டுறவுப் பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, நாட்டில் மீண்டும் போர் ஏற்படாது. இருப்பினும், பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய விடயங்கள் உள்ளன. இவை குறித்தும் கவனம் செலுத்தி, மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குரிய காணிகளை மீள வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நான் முல்லைத்தீவு மாவட்ட செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில், தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் இங்கு படைப்பிரிவுத் தளபதியாக பணியாற்றினார். அன்றைய காலகட்டத்தில் மீள்குடியமர்வுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூருகின்றேன். அன்று அவருடன் கலந்துரையாடி மக்களின் மீள்குடியமர்வு மற்றும் காணிகள் விடுவிப்பைச் சாத்தியமாக்கியிருந்தோம். தற்போதும் இத்தகைய கலந்துரையாடல்கள் ஊடாகக் காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றேன்.

தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் கோரிக்கைகள் ஆகிய இரண்டும் இரு வேறு முக்கிய முனைகளாகும். இவ்விரண்டுக்கும் இடையே சீரான சமநிலையைப் பேணி நாம் தீர்வினை எட்ட வேண்டியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே, நாம் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடிச் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின்போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர்.

போர் நிறைவுற்ற 2009ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக் குளத்தில் காணி விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவ முகாமின் வேலியை 10 மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக் குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதி அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதி அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியில் உள்ள காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் உறுதி அளித்தார்.

கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னி பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.