செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூட்டணியின் குடும்பப் பிரச்சினை விரைவில் தீரும்! – இராதா தெரிவிப்பு

கூட்டணியின் குடும்பப் பிரச்சினை விரைவில் தீரும்! – இராதா தெரிவிப்பு

1 minutes read

“வேலுகுமார் எம்.பி. எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை அவர் பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்றும் குளோபல் கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா நுவரெலியாவில் நடைபெற்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 210 பேர் இந்தப் பட்டமளிப்பு விழாவில் தங்களுடைய பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வுக்குக் கல்லூரியின் பணிப்பாளர் செல்லத்துரை பிரதீஸ்குமார் தலைமை தாங்கியதுடன் பிரதம அதிதியாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நாகர்கோவில் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நடனத்துறை கலைஞர்களும், ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக இராதகிருஷ்ணன் எம்.பி. கலந்துகொண்ட பின், அவரிடம் ஊடகவியலாளர்கள் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முடிவுக்கு மாறாக (நடுநிலை) வேலுகுமார் செயற்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் முற்போக்குக் கூட்டணியில் தற்போது உள்ள ஐவரும் பஞ்ச பாண்டவர்கள் போல் அண்ணன் – தம்பிமார். எங்களுக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சினை அண்ணன், தம்பிமாருக்கிடையில் ஏற்படும் குடும்பப் பிரச்சினை போன்றுதான். அதனை நாம் எங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்வோம். அந்தவகையில் இப்பிரச்சினையும் விரைவில் தீரும். இணைந்து பயணிப்போம்.

ஜனநாயகக் கட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள்தான் அமைப்பைச் சரியாக வழிநடத்த உந்துசக்தியாக அமையும். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். இந்த ஆரோக்கியமான சண்டையும் நன்மையில் முடியும் என்றே நம்புகின்றேன்.

தான் எடுத்த முடிவு சம்பந்தமாக வேலுகுமார் எமக்குத் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றோம். அவர் அரசு பக்கம் செல்லமாட்டார்.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக எமக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அந்தச் சந்திப்பில் நாமும் பங்கேற்போம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.