இங்கிருப்பதாய் தோன்றும்
என் கவிதைகளில்
நீந்திக்கொண்டிருக்கும்
அகதிகள் அறிவர் ஆழங்களை…
சுடப்பட்ட என்னை நோக்கி
திகைக்கிறது அத்தோட்டா
மனதை சுடும்கலை அறியாது.
இருப்பின் மீதெல்லாம் பாயும்
கொல்லும் ஆவிகள் தளர்கிறது.
வெட்டுப்புலியின் நிழல் பட்டு…
எனது காடுகளில் சரசரக்கும்
பூட்ஸ் ஒலிகளின் கொழுப்பில்
பாய்ச்சும் மின்சாரங்களை
என் குருதியில் நனைந்த பூக்கள்…
எனது நிர்வாணங்களில்
கழுவப்படுகிறது உங்களின் அமைதி.
கட்டப்பட்ட பின்கைகளின்
விலங்குகளை துறுவுகின்றன
அந்திச்சூரியனின் மஞ்சள் கதிர்.
புத்தனின் கண்ணீர்
ஓடை பெருக்கும் மழையாகிய
தினமொன்றில் நான்
அக்கவிதையில் தீட்டுவேன்
உன்னுயிரை முற்றுபுள்ளியாக…
– ஸ்பரிசன் –
