Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவியரசர் கண்ணதாசன் ‘தென்றல்’ என வந்த தீந்தமிழ்க் கவிஞன்..!

கவியரசர் கண்ணதாசன் ‘தென்றல்’ என வந்த தீந்தமிழ்க் கவிஞன்..!

4 minutes read

கவியரசர் கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகை அறுபதுகளின் முற்பகுதியில் அரசியல் – இலக்கிய ஆர்வலர்களின் கைகளில் தவழ்ந்தது.

ஒவ்வொரு தமிழாசிரியர் கைகளிலும் ‘தென்றல்’ தடவிச் சென்றது எனச் சொல்வார்கள்..!

அவர் தி. மு. க.வைவிட்டு வெளியேறி ஈ. வி. கே. சம்பத்தின் தலைமையில் ‘தமிழ்த் தேசியக் கட்சி’யைக் கட்டியெழுப்பிச் செயற்பட்ட அக்காலத்தில் காரசாரமான அரசியல் கட்டுரைகளைத் தென்றலில் எழுதிவந்தார்.

அண்ணாத்துரையையும் அவர்தம் தம்பிமாரையும் ‘கோயபல்சும் கூட்டாளிகளும்’ என்று திமுகவின் திராவிட நாடுக் கோரிக்கையைக் கடுமையாகத் தாக்கி எழுதினார்.

தன் மனதில் தோன்றுவதை அப்படியேபேசுவது – எழுதுவது அவரது குணாம்சம். வஞ்சகமற்ற இதயமுள்ளவர் என அவரைப் புரிந்துகொண்டவர்கள் கூறுவார்கள்.

காமராசரைத் திட்டினார் – புகழ்ந்தார்.
அண்ணாவைப் புகழ்ந்தார் – திட்டினார்.
நேருவைத் திட்டினார் – புகழ்ந்தார்.
இந்திராவைத் திட்டினார் – புகழ்ந்தார்.
கருணாநிதியைப் புகழ்ந்தார் – திட்டினார்.
எம். ஜி. ஆரைத் திட்டினார் – புகழ்ந்தார்.

அவரின் தாக்குதலுக்கு இலக்காகாத தலைவர்களே தமிழகத்தில் இல்லையெனலாம். ஆனால் யாரும் அவர்மீது கோபங்கொண்டு வசைபாடவில்லை. அவரது அழகு தமிழ்த் தாக்குதல்களை அவர்கள் இரசித்தனர் என்றே கூறலாம். இதனை எம். ஜி. ஆரே கூறியுள்ளார்.

சீனப்பெருந்தலைவர் மாஓ – வை ‘மா சே தூ’ என்று ‘ராக் அன் ரோல்’ நக்கல் கவிதை பாடினார்.
‘சிவப்பு நிலா மாஓ’ எனப் புகழ்ந்தும் பாடினார்.

‘பஞ்சைப் பராரிகள் ஒன்று பட்டால்
அது கோட்டை தகர்த்திடும் கூட்டு
அதைக் கூட்டட்டும் நாட்டில் என் பாட்டு’..

என எழுச்சிக் கவிதையும் படித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் மறைந்தபோது ஆறாத்துயர்கொண்டு எழுதினார்.

”மேடையில் ஓர் வேங்கை பாயுமே கைகளை
விண்ணோக்கி வீசி வருமே
வீறுகொண் டோர்யானை போரிற் கிளம்புமே
வெஞ்சேனை முறுக்கேறுமே… …”

எனத் தொடர்ந்தது அவர் எழுத்து..!

எம். ஜி. ஆர். முதலமைச்சராகியதும் கவியரசரை அழைத்து அரசவைக் கவிஞராக்கி மகிழ்ந்தார்.

1980 -ம் ஆண்டு யாழ் ‘கிக்ஸ் வெளிவாரிப் பட்டப்படிப்பு நிலையத்தில்’ நடைபெற்ற விழாவில் ”குற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன்” என்ற வழக்காடு மன்றத்தில் கலந்துகொண்டு பேசியதும் ஞாபகம் வருகிறது.

இந்த வழக்காடு மன்றச் செய்தி தொகுக்கப்பட்டு அன்று பத்மா மகேசுவினால் (பத்மா இளங்கோவன்) ‘தினபதி’ பத்திரிகைக்கு அனுப்பப்பட்டது.
அச்செய்தி (24 – 10 – 1980) தினபதி பத்திரிகையில் இரண்டு பக்கங்களில் முழுமையாக அழகுறப் பிரசுரமாகியது.
தற்போது அதனைப் பத்மா இளங்கோவன் சிறு நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

கவிஞரின் கவிதைகளின் அழகில் எனக்கும் மயக்கம் உண்டு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி கவிஞர் கா. மு. செரிப் தலைமையில்நடைபெற்ற (04 – 10 – 1967) ‘நவரசக் கவியரங்’கில் ”அழுகை” என்ற தலைப்பில் கவியரசர் பாடிய கவிதையை அன்று நானும் எத்தனையோ தடவை படித்துப் பார்த்து ஏங்கியதுண்டு.

”அழுகையில் படம்பார்ப் போரை
அழவைக்கும் நடிக வேந்தே..!
விழுமிய பொருளை யெல்லாம்
விழிகளில் காட்டும் மன்னா..!
எழுகடற் புவியில் நீயே
எட்டாவ தாக வந்து
எழும்கலைக் கடலாய் நின்றாய்..!
இனியனே வாழ்த்து கின்றேன்..!

தொழுகையில் தொடங்கி அந்தத்
தொடர்ச்சியின் ரசத்தில் ஒன்றாம்
அழுகையைப் பற்றிப் பாட
அழைத்தனர் என்னை..! நன்றாய்
அழுதவன் ஆத லாலே
அனுபவம் அதிகம்..! இங்கே
அழுகையைப் பற்றிப் பாடும்
அருகதை எனக்கே உண்டு..!

பிறப்பிலும் அழுதேன்..! வந்து
பிறந்தபின் அழுதேன்..! வாழ்க்கைச்
சிறப்பிலும் அழுதேன்..! ஒன்றிச்
சேர்ந்தவர் சிலரால் சுற்று
மறைப்பிலும் அழுதேன்..! உள்ளே
மனத்திலும் அழுதேன்..! ஊரார்
இறப்பிலே அழுவதெல் லாம்
இதுவரை அழுது விட்டான்..!

சீசரைப் பெற்ற தாயும்
சிறப்புறப் பெற்றாள்..! இன்று
நாசரைப் பெற்ற தாயும்
நலம்பெறப் பெற்றாள்..! காம
ராசரைப் பெற்ற தாயும்
நாட்டிற்கே பெற்றாள்..! என்னை
ஆசையாய் பெற்ற தாயோ
அழுவதற் கென்றே பெற்றாள்..!”

இப்படித் தொடரும் அவரது கவி அழுகை..!

காதல் கனிரசம் சொட்ட அழகு தமிழில் அள்ளித் தருவதில் அவர் வல்லவர் தான்.;!

பதின்மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான கவிஞர் ‘குழந்தை ஒரு தொல்லை’ எனவும் கவி வடித்தார்..!

”நள்ளிரவில் பிள்ளையெலாம் தூங்கும் போது
‘நடத்திடுவோம் சுகப்பாடம்’ எனநி னைந்து
மெல்லமனை மாதரசின் அருகில் சென்று
மெய்தீண்டி ‘வா’ என்பேன்.. அவளும் நெஞ்சம்
உள்ளவள்தான் ஆகையினால் எழுவாள்.. பிள்ளை
துள்ளிஎழும் ஓலமிடும்..! தோல்வி..! தோல்வி..!
கள்ளனையோர் தேள்கடித்த கதையும் காதற்
கதைநடுவில் பிள்ளையழும் கதையும் ஒன்றே..!”

இவ்வாறு தொடரும் அவர் உணர்வுக் கொதிப்பு..!

கவிஞர் சிறிது காலம் ‘பெத்தடின்’ என்ற போதைதரும் ஊசியையும் போட்டுக் கொண்டார். அதையும் அவர் கவிதையில் ஒப்புவிக்கத் தவறவில்லை..

”சத்தியம் தவறும் கூட்டம்
தருமத்தை மறந்த கூட்டம்
வித்தைகள் காட்டும் கூட்டம்
வேதனை வளர்க்கும் கூட்டம்
நித்தியம் பார்த்துப் பார்த்து
நெஞ்சமே வெந்து வெந்து
‘பெத்தடின்’ ஊசி போட்டேன்
பிறிதென்னைக் காப்பவர் யார்..?

சந்திக்கும் மனித ரெல்லாம்
தலையையே தின்கின் றார்கள்
வந்தித்து வாழ்த்துச் சொல்ல
வழியிலே ஒருவ ரில்லை
நிந்தித்தே பழகிப் போன
நீசரைத் தினமும் கண்டேன்
சிந்தித்தே ஊசி போட்டேன்
சிறிதென்னைக் காக்க வேண்டி..!”

இவ்வாறு தொடர்கிறது அவர் துயர் சுமந்த ‘பெத்தடின்’ கவிதை..!

நாதசுர மேதை டி. என். இராஜரத்தினம் பிள்ளை மறைவு குறித்து உளமுருகி அவர் வடித்த கவிதை அருமை..!

”கையிலே இசையா பொங்கும்
காற்றிலே இசையா துள்ளும்
மெய்யிலே இசையா மின்னும்
விழியிலே இசையா என்றே
ஐயனின் இசையைக் கேட்போர்
அனைவரும் திகைப்பர்..! இன்று
கையறு நிலையிற் பாடக்
கருப்பொருள் ஆனாய்..! ஓய்ந்தாய்..!

செவியினில் ஓடி எங்கள்
சிந்தையில் ஓடி இந்தப்
புவியெலாம் ஓடி நின்பாற்
பொங்கிய ‘தோடி’ வேறெங்
கெவரிடம் போகும்..? ஐய..!
இனியதைக் காப்பார் யாவர்..?
அவிந்தநின் சடலத் தோடே
அவிந்தது ‘தோடி’ தானும்..!

‘தோடி’ இராகத்தினால் பெரும்புகழ்பெற்ற அந்தக் கலைஞரை நினைத்து கவிஞன் கலங்கியபோது இவ்வாறு தொடர்ந்தது அவர் கவிதை..!

பழகிய காதல் எண்ணிப் படுக்கையில் அழுவதிலும் சுகம் உண்டு என்கிறார் கவிஞர்..!

”தொழுவது சுகமா..? வண்ணத்
தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா..? உண்ணும்
விருந்துதான் சுகமா..? இல்லை
பழகிய காதல் எண்ணிப்
பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகமென் பேன்யான்
அறிந்தவர் அறிவா ராக..!

கோப்பையின் மதுவே..! உன்னைக்
குடித்துநான் துடித்த தாலே
காப்பியக் கவிஞ னானேன்..!
காதலி மீண்டும் வந்தாள்
மூப்பிலா இளைஞ னானேன்..!
முடிவிலா உளத்தன் நானே
யாப்பிலா அவளை நெய்வேன்
அளிப்பனோர் பால காண்டம்..!

எப்போதும் அவர் கவிநெஞ்சம் பாவால்தான் நனைகிறது..!

பெருந்தலைவர் காமராசர் மீது பெரும்பற்றுக் கொண்டவர் கவிஞர்.

”தீயன நாடார் என்றும்
சிறுமைகள் நாடார் வாழ்வில்
மாயங்கள் நாடார் வெத்து
மந்திரம் நாடார் நீண்ட
வாய்கொண்டு மேடை சாய்க்கும்
வறட்டு வார்த்தைகள் நாடார்
சேயினும் இளைய நெஞ்சு(ச்)
செம்மல்பல் லாண்டு வாழ்க..!

படித்தவ னல்லன் பல்கலைக் கல்வி
முடித்தவ னல்லன் நால்வகை வேதம்
குடித்தவ னல்லன் கொள்கை நிலத்தில்
வெடித்து வந்தவன் வெள்ளை நெஞ்சினன்..!”

இவ்வாறு பெருந்தவைரை வாழ்த்திக் கவிமழை சொரிந்துள்ளார்..!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமானதை எண்ணித்துடித்தவர் கவிஞர்.

”வெற்றிலையும் வாயும்
விளையாடும் வேளையிலே
நெற்றியிலே சிந்தை
நிழலோடி நின்றிருக்கும்..!
கற்றதமிழ் விழியில்
கவியாக வந்திருக்கும்
‘அண்ணே’ எனஉரைத்தால்
அதிலோர் சுவையிருக்கும்..!”

என ஆற்றாத்துயர்கொண்டு அவர் கவிதையில் அழுதார்..!

”தென்றல்” பத்திரிகை நின்றுபோன ஆற்றாமையில் அழுதும் கவி படைத்தார்.

”தென்றலே..! என்னுயிரே..!
தீந்தமிழே..! காவியமே..!
சென்று முடிந்துவிட்ட
தேனாறே..! செந்தமிழே..!
மன்றமே..! காவிரியே..!
மாணிக்கப் பெட்டகமே..!
கன்றின் குரலே..!
கடலலையே..! கற்பனையே..!
என்றோ பிறந்தென்
இதயத்துள் ளேநடந்து
நின்றுவிட்ட கண்ணே..!
நின்பெருமை யான்மறவேன்..!”

இவ்வாறு ஆற்றாமையினால் அழுது கவி தொடர்ந்தார்..!

கவிஞர் ‘தென்றல்’ – ‘முல்லை’ – ‘கண்ணதாசன்’ ஆகிய இதழ்களை வெளியிட்டிருப்பினும் அவரது மனங்கவர்ந்த பத்திரிகை ‘தென்றல்’ தான்..!
‘பாசமலர்’ படத்திற்கென அவர் எழுதிய பாடலிலும் ‘தென்றல்’ தவழ்ந்ததைக் கேட்டிருப்பீர்கள்..!

இலங்கைத் தமிழர்க்காய்க் குரல் கொடுத்து அன்று கட்டுரை – கவிதை அதிகம் எழுதியவர் கவிஞர்தான்..!

கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பைப் பேணியவர் (எங்கள் மூத்த சகோதரர்) நாவேந்தன்..!

கண்ணதாசன் 08 – 04 – 1964 ‘தென்றல்’ பத்திரிகையில் வழமையை மீறி முதல் பக்கத்தில் நாவேந்தனின் ”இலங்கையில் நடப்பது என்ன..?”’ என்ற கட்டுரையைப் பிரசுரித்துக் கௌரவித்தார்.

நாவேந்தனின் பல கட்டுரைகள் (புனைபெயரிலும்) தென்றலில் பிரசுரமாகின.

‘தென்றல்’ அரசியல் கட்டுரைகளுடன் இலக்கியப் பக்கங்களையும் சுமந்து வெளிவந்தது.
வெண்பா எழுதும் போட்டிகளும் தென்றல் இதழ்கள் பலவற்றில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலிருந்த ‘தமிழ்ப்பண்ணை’ என்ற புத்தகசாலையில் தென்றல் – மாலைமுரசு – முரசொலி போன்ற பத்திரிகைகள் அன்று (அறுபதுகளில்) விற்பனையாகும்.

எனது பாடசாலைக் காலங்களில் மூத்த சகோதரர் நாவேந்தனுடன் அங்கு சென்று அவர் வாங்கும் அப்பத்திரிகைகளை நானும் தொடர்ந்து வாசித்தமை இன்றும் ஞாபகம்..!

நன்றி – வி. ரி. இளங்கோவன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More