“இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும்.
சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர்.
கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால், இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது.
அடுத்த புத்தாண்டில், இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும்.
இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும்.
அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!” – என்றுள்ளது.