Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எதுகை மோனை | சிறுகதை | A.H.யாசிர்அரபாத் ஹசனி

எதுகை மோனை | சிறுகதை | A.H.யாசிர்அரபாத் ஹசனி

5 minutes read

நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது.  சுவர்  கடிகாரத்தின் முள் அசையும் சப்தம்  பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத குழந்தையும்  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

சமயலறையில் பெரும் சப்தம் கேட்டது… சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள் அன்பின் மனைவி. அவளை பயம் பற்றிக் கொண்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அன்பை எழுப்பினாள். அவனோ! “போடின்னு..” எச்சில் வழிந்த உதட்டைத் துடைத்தவாறு தூக்கத்தைத் தொடர்ந்தான்.

ஜீரோ வால்ட் பல்பின் மெல்லிய வெளிச்சத்தில் மெதுவாய் நடந்தாள்… கடிகார முட்கள் மட்டும் தங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. பயத்தில் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டாள். மெதுவாக சமையலறைக் கதவைத் திறந்து பார்த்தாள். ஜன்னல் வழியாகப் பூனை ஒன்று வெளியேறிய சப்தம் கேட்டது. குழந்தைக்கு வைத்திருந்த பால் பவ்டர் மற்றும் மசாலா சாமான்கள் எல்லாம் சமையலறை முழுக்க சிதறிக் கிடந்தது.

‘சனியப் புடிச்சப் பூனை! இப்படி பண்ணுது?’ காலையில்  குழந்தைக்குப் பால் கொடுக்க பால் பவ்டர் வேணுமே! என்ன செய்ய? என்று தனக்குள் கேள்விக் கேட்டு கொண்டே சிதறிய டப்பாக்களை ஒன்று சேர்த்தாள்.

பெட்ரூமில் தூங்கும் கணவனை உலுக்கி எழுப்பினாள். இந்த முறை எழுந்து விட்டான். நடந்ததை விபரமாக அவனிடம் எடுத்துக் கூறினாள். அவன்  பங்கிற்கு அவனும் பூனையைத் திட்டித் தீர்த்தான்…

‘சரி! அந்த ஃபோனை எடு!  பால்பவுடரை ஆன்லைனில் ஆர்டர் செய்றேன்’ என்றான். (சிறிய பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்வது அன்பின் வழக்கம்) ஆர்டர் செய்துவிட்டு இவரும் தூங்கி விட்டார்கள்.

அன்பு வீட்டு வாசலில் மளிகைக் கடை நடத்தும்… பாய், கடை திறக்கும் சப்தம் அவர்களை  எழுப்பியது. சிறிது நேரம் கழித்து வாடகை பணம் கொடுக்க அன்பின் வீட்டுக்குள் நுழைந்தார் பாய். கையில் பேக்குடன் ஒரு வாலிபனும் உள்ளே வந்தான். பார்க்க படித்தவன் போன்றே இருந்தான். அவன், ஆன்லைன் நிறுவனத்தின் ஊழியன் என்பது அவனது டீசர்ட் கூறியது. பாய் வாடகை பணம் நீட்டவும், அவன் பால் பவ்டரை நீட்டவும் இரண்டும் ஒருசேர இருந்தது. 

அன்பின் வழக்கம் பாயிக்கு தெரியும். ஒரே நேரத்தில்  பாயும், ஆன்லைன் பாயும் சந்திப்பு இதுவே முதல் முறை.

‘அன்பு வூட்லதான் வாடகைக்கு கடை நடத்துறோம். நம்மகிட்ட சாமா வாங்கமல்… வெளியாளுங்க   வாங்குறாரே?’ இது நல்லாவா இருக்கு? ‘இது அன்பிடம் கேட்டு விடலாமா?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டே கடைக்குள் சென்றார்.

அந்த பகுதி மக்களுக்கு பாய் கடை தான்  சூப்பர் மார்கட். அனைத்து பொருட்களும் வைத்திருந்தார். பொருட்கள் வாங்க மக்கள் வரத் தொடங்கினர். வேலையே இல்லாமல் பேப்பர் படிக்கும் பஷீரும், முன்னுசாமியும்  வழக்கம் போல் வந்து நாளிதழைப் பகிர்ந்துப் படிக்கத் தொடங்கினார்கள்.

நான்காம் பக்கத்தின், ஐந்தாம் பத்தியில் சீனாவில் கொரோனா பரவும் செய்திகளை இருவரும் ஒரு சேரப் படிக்க. ‘அப்படின்னா  என்ன முன்னுசாமின்னு பாய் கேட்டார்.’ ‘அதுவா கடபாய்! ஏதோ கொரோனாவாம்’!அது வந்தவுடனே மனுசனுக எல்லாம்  செத்துவிடுவானாம். உலகம் பூரா பரவி வருதாம்!”என்றார். (அவரை ஒரு சிலர் கடபாய் என்று அழைப்பார்கள்)

‘யா அல்லாஹ்!  நீதான் மக்களை காபாத்தனும்’ என்று இறைவனை வேண்டிக் கொண்டார் பாய்.

பக்கத்து ஊரில் பணிபுரியும் அன்பும் தினமும் வேலைக்குச் செல்லும் அன்பு,

வேலையிலிருந்து திரும்பும் போதெல்லாம் மளிகைப் பொருட்களை வாங்கி வருவான். 

நாட்கள் மேகங்களாய் கலைந்தன.

கொரோனாவின் தாக்கம் நாட்டில்  கடுமையானது. அரசு மக்களைப் பாதுகாக்கும் முறைகளைப் பின்பற்றத் தொடங்கின.  கொடிய நோயின் பரவல் தொடங்கியது. அனைத்து மத ஆலயங்கள், திருமண மண்டபங்கள் அரசால் மூடப்பட்டன. மக்கள் கூடும் இடங்களில் சட்டங்கள் கடுமையாயின. நோயின் வீரியம் குறையவில்லை. முழு லாக்டவுன் அரசால் கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். பயம் மட்டுமே மக்களை ஆண்டது.

ஒரு நாள் காலை குழந்தைக்குப் பால் கரைக்க அன்பின் மனைவி சமையலறை சென்ற போது பேரதிர்ச்சி காத்திருந்தது !

நன்கு தூக்கத்திலிருந்த அன்பை எழுப்பிக் கொண்டு சென்றாள். ‘இங்கே பாருங்க! அந்த பூனை எல்லா சாமானையும் கீழே தள்ளிட்டு  போயிருக்கு. அப்போவே அந்த சன்னல் கதவைச் சரி செய்ய சொன்னேன். நீங்க செய்யவே இல்லயென்று. கடிந்துக் கொண்டாள். ‘இப்போ! என்ன செய்ய? குழந்தை வேறே எந்திரிக்குற டைமிது.’

 ‘ஏய்! இரு.’ 

மொபைலை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்ய முனைந்தான்…. லாக்டவுனால் டெலிவரி கிடையாதென்று பதில் தந்தது அந்த நிறுவனம்.

விழிபிதுங்கி போனான். குழந்தையின் அழுகை அதிகமானது. செய்வதறியாமல் இருவரின் தவிப்பு அதிகமானது.நோய் தொற்று பயம் அக்கம், பக்கமுள்ள வீடுகளுக்கு செல்லத் தடுத்தது. 

குழந்தையின் அழுகையை நிறு‌த்தும் வழி தெரியவில்லை. பசி அதிகமானது! ‘என்ன செய்ய! டெலிவரி இல்லேங்குறான். கடுப்பாகி கத்தினான்.’

‘நீங்க கடபாய்க்கு கால் செய்யுங்க.. அவர் வந்து எடுத்துக் கொடுப்பார்.’ ‘ஐயோ! எப்புடி கேபேன்?.. நம்ம வூட்லதான்  அவர் கடை வச்சியிருக்காரு. இதுவரை ஒருநாள் கூட சாமான் வாங்கல.’ ‘அவர் கண் பாக்கதான் ஆன்லைனில் சாமான் வாங்கினோம்.. எந்த முகத்தை வச்சி  அவர்ட்ட கேட்பேன்.’ என்று நாற்காலியில் போய் அமர்ந்தான்.

‘அதெல்லாம் பிரச்சினை இல்ல.  பாய்கிட்ட நான் பேசுரேன்னு, கால் செய்து விஷயத்தைச் சொல்லி பதறினாள்.’ நிலைமையைப் புரிந்துக் கொண்ட பாய் ‘இருமா..! மக்க எப்படியும் சாமான் கேட்பாங்கன்னு எல்லா சாமானையும் வூட்டுலத்தான்  வச்சியிருக்கேன். நான் கொண்டுவரேன் என்றார்’. தேவையான சாமான் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்தார்.. 

‘என்னா தம்பி! நல்லா இருக்கியான்னு’.

 அவன் கிட்ட பாய் நலம் விசாரித்தார்.

அவர்  நலம் விசாரிப்பில், ஒரு நாளைக்கு பத்து முறை ஆன்லைனில் ஆர்டர் செய்தாலும், அவசரமான காலக் கட்டங்களில் அருகில் இருப்பவன் தான் உதவி செய்வான் என்ற பொருள்கள் அடங்கியிருந்தன என்பதை புரிந்துகொண்டான்.

அக்கம்,பக்கம் பார்க்காமல் தூரமாய் தன் பார்வை போனதை   தவறென்று உணர்ந்தான். கடபாய் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு தலையைத் தொங்கவிட்டான். மொபைலில் இருந்து ஆன்லைன் ஆப்பை டெலிட் செய்து மொபைலை கட்டிலில் போட்டான்.

நிறைவு..

– A.H.யாசிர்அரபாத் ஹசனி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More