Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அப்பா | சிறுகதை | ஐ.கிருத்திகா

அப்பா | சிறுகதை | ஐ.கிருத்திகா

9 minutes read

“இது அல்சைமர்….”

அப்பாவை  பரிசோதனை  செய்த  டாக்டர்  நிதானமாக  கூறினார். காயத்ரிக்கு  அல்சைமர்  பற்றி  எதிலோ  படித்ததாக  ஞாபகம். சட்டென்று  நினைவுக்கு  வரவில்லை. கேள்விக்குறியோடு  டாக்டரை  நோக்கினாள். டாக்டரின்  முகம்  தீவிரமடைந்திருந்தது.

“சொல்றதுக்கு கஷ்டமாதான் இருக்கு….” என்ற  பீடிகையோடு  ஆரம்பித்தவரை  காயத்ரி  பயத்தோடு  பார்த்தாள்.

“இந்த நோய் வந்தா மூளை சுருங்க ஆரம்பிச்சிடும். மறதி  வரும். நாளாக, நாளாக  பேச, குளிக்க, சாப்பிட மறந்து போகும். இந்த  நோயாளிகள்  கொஞ்சம்  கொஞ்சமா  சொந்த, பந்தங்களையும் மறக்க ஆரம்பிச்சிடுவாங்க.”

“இதை குணப்படுத்தவே முடியாதா, டாக்டர்….?” என்று  கேட்கும்  போதே  காயத்ரியின்  குரல்  உடைந்து  போயிருந்தது.

“இது வயோதிகம் காரணமா வர்ற வியாதி. இதை  குணப்படுத்த  மருந்துகளே  கிடையாதும்மா.”

டாக்டர்  முடிக்க, காயத்ரி  கண்கள்  கலங்க அப்பாவைப்  பார்த்தாள்.

‘இந்த அப்பாதான் எத்தனை உன்னதமானவர். என்  வாழ்க்கை  அத்தியாயத்தின்   ஒவ்வொரு  நாளும்  புதுப்புது  நாளாக  சிருஷ்டிக்கப்பட்டது இவராலல்லவோ. அப்படிப்பட்ட  அப்பாவா  இன்று  ஜடமாகி  சூன்யத்தை  வெறிக்கிறார்.’

காயத்ரி  தாளமாட்டாமல்  அழுதாள்.

“பெண்கள் அழப்பிறந்தவங்க இல்லம்மா. ஆளப்பிறந்தவங்க. சின்ன  விஷயத்துக்கெல்லாம்  ஏன்  கண்கலங்குற? கமான்…எழுந்து  போய்  முகம்  கழுவிட்டு  வா…கபாலி  கோவிலுக்கு  போயிட்டு  வரலாம். திரும்பி  வரும்போது  உனக்கு  பிடிச்ச மொளகா  பஜ்ஜி  சாப்பிட்டு  வரலாம். கெளம்பு…”

கணிதத்தில்  மதிப்பெண்கள் குறைந்து  போனதை  நினைத்து அழுது கொண்டிருந்தவளை  அப்பா தேற்றியவிதமே தனிதான். கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டு அப்பா  அறிவுரை சொன்னது  இன்று  கூட  பசுமையாக  நினைவிலிருக்கிறது.

“அழறது, கவலைப்படறது இதையெல்லாம் இன்னியோட விட்டுடு. இந்த தடவை  நாப்பத்தஞ்சு  மார்க் எடுத்த  நீ  அடுத்த முறை தொண்ணூத்தஞ்சு எடுக்கலாம். ஆனா கவலைப்பட்டு  உடம்பை கெடுத்துகிட்டா மறுபடி தேறமுடியுமா? மலையே  இடிஞ்சு  தலையில  விழுந்தாலும்  கலங்ககூடாது. அழுது  மாயறதை விட  அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறது  புத்திசாலித்தனம்” என்று  கூறியவர், இன்று  யோசனைகளுக்கு  அப்பாற்பட்ட  உலகத்தில்  சஞ்சரித்து  கொண்டிருக்கிறார்.

நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. அப்பாவிடம் ஏதாவது  மாற்றம் தென்படுமா என்று  ஒவ்வொரு  நாளும் பார்ப்பதும் ,ஏமாறுவதும்  காயத்திரிக்கு  வழக்கமாகிவிட்டது.

“இந்த ஜோக் நல்லாயிருக்குப்பா. படிச்சு   காட்டவா…” என்று  கேட்டுவிட்டு  அப்பாவின்  முகத்தை  ஆராய்வாள். அவர்  சலனமின்றி  அமர்ந்திருப்பார். இருந்தாலும் அவர் கேட்பதாய்  பாவித்து  கொண்டு அந்த  ஜோக்கை வாசிப்பாள். வாசித்து  விட்டு  சிரிப்பாள். அவரும்  சிரிக்க  மாட்டாரா  என்ற நப்பாசைதான்.

மூளையின்  மடிப்புகளில்  பொதிந்து  கிடந்த  ஞாபகங்கள்  எல்லாம்  கொஞ்சம் கொஞ்சமாக  நசிந்து  போய்விட, பேசுவது  சிறிது, சிறிதாய்  குறைந்து  ஒரு  கட்டத்தில்  நின்றே  போனது.

“கொஞ்ச நாள் ஒன்னுக்கொன்னு சம்மந்தமில்லாம பேசுவாங்க. நோய்  தீவிரமடையும்  போது  பேச்சு  குறைஞ்சிடும். “

டாக்டர் சொன்னது போல அவ்வப்போது  பேசிக்கொண்டிருந்தவர் அடுத்த  சிலமாதங்களில்  மொத்தமாக மவுனமாகிப்  போனார்.

அப்பா ஒரு  மு. வ  பிரியர். லைப்ரரிக்கு  போனால் வீடு  மறந்து போவார்.

“மு. வ-வோட  மலர்விழி  கிடைச்சுது. உட்கார்ந்து  படிக்க  ஆரம்பிச்சிட்டேன். ஏற்கனவே  படிச்சிருந்தாலும்  புதுசா  படிக்கிற  மாதிரி ஒரு  சந்தோஷம். எத்தனை  முறை  படிச்சாலும்  திகட்டாத, அருமையான  எழுத்து  அவரோடது…”

அப்பா சிலாகிக்க, அம்மா அலுத்து கொண்டாள்.

“அந்த மு. வ  அப்படி  என்னதான்  எழுதியிருப்பாரோ….”

“படிச்சு பார்த்தாதானே தெரியும். நீ  எங்கே  படிக்கப்  போற. ஏம்மா காயத்ரி, நீ  படிக்கிறியா…?”

அப்பா  வாஞ்சையாக  கேட்டால்  மறுத்து  பேச மனம்  வருமா. காயத்ரி  தலையசைத்தாள். அப்பா  உடனே  லைப்ரரிக்கு  கிளம்பி விட்டார். அப்பாவின்  புகழ்ச்சியை  கேட்டு, கேட்டு  காயத்ரியும்  மு. வ-வின்  ரசிகையாகிப்  போனாள்.

காயத்ரி  மு. வ-வின்  மண்குடிசை  நாவலைப்  படிக்க  தொடங்கினாள். மு. வ-வாவது  அப்பாவின்  மவுனத்தை  கலைத்துவிட மாட்டாரா என்ற ஏக்கம்  மனதுக்குள். பத்து பக்கங்கள்  படித்து விட்டு  நிமிர்ந்தபோது, அப்பா அந்த  நிலையிலிருந்து  மீள  மாட்டார்  என்ற  உண்மை  பட்டவர்த்தனமாக  புரிந்தது. முடியாது  என்று  தெரிந்தும்  முட்டி மோதிக்  கொண்டு  முயற்சித்தது  வீண்  என்றுணர்ந்தவள்  அதை  ஏற்றுக்கொள்ளமுடியாமல்  குமுறி, குமுறி  அழுதாள், அம்மா  இறந்தபோது  ஓவென்று  கதறியவளை  அப்பா  ஆறுதலாக  அணைத்து கொண்டது  நினைவுக்கு  வந்தது.

“அழாதேடா…மரணம் இயற்கை. அதை  வென்ற  மனுஷனே  கிடையாது. இதுக்கு  உங்கம்மா  மட்டும்  விதிவிலக்கா  என்ன….சாந்தமாயிரு. ஆக  வேண்டியதைப்  பார்ப்போம்” என்று  ஆறுதல்  சொன்னவர்  மனதுக்குள்  மனைவியை  இழந்த  வேதனையில்  துடித்து  கொண்டிருந்தது  காயத்ரிக்கு  தெரியாமலில்லை.

அப்பா, அம்மாவிடம்  கோபப்பட்டதாக  அவளுக்கு  ஞாபகமில்லை. ஒரேயொரு  முறை  கடிந்து  கொண்டார். அதுவும்  காயத்ரிக்காகதான்.

“அண்ணன் மேலப் படிக்கணும்னு ஆசைப்படறான். அப்பாவால  ரெண்டுபேரையும்  படிக்க  வைக்க  முடியாது. அதனால  நீ  படிச்சது  போதும்டி. ஆம்பளை  படிச்சாதான்  காலத்தை  ஓட்டமுடியும். உனக்கு  இந்த  படிப்பே  எதேஷ்டம். அப்பா  கேட்டா  படிக்கறதுக்கு  இஷ்டமில்லேன்னு  சொல்லிடு…” என்று  அம்மா  சொன்னதை  கேட்டுக்கொண்டே  வந்த  அப்பாவின்  முகம்  சிவந்து  போனது.

” நல்லாப் படிக்கிறவளை நீயே படுகுழியில தள்ளப் பார்க்கறியே…நம்ம இயலாமையை  அவகிட்டதான்  காட்டணுமா…ரெண்டு  பேரும்  நல்லாப்  படிக்கட்டும். செலவு  செய்ய  நானாச்சு” என்றவர் வேலை நேரம்  போக மீதி  நேரத்தில்  ஒரு  சூப்பர் மார்க்கெட்டில்  கணக்கெழுத  துவங்கினார்.

காயத்ரி வேதனையோடு  அப்பாவுக்கு  சாப்பாடு  ஊட்டிவிட்டாள். எத்தனையோ முறை அவர், அவளுக்கு  ஊட்டிவிட்டிருக்கிறார். அப்பா  சாப்பிடும்  நேரம்  பார்த்து  காயத்ரி  எங்கிருந்தோ  ஓடிவருவாள்.

“எனக்கு ஒரு வாய்ப்பா…” என்று வாய் திறப்பவளுக்கு அப்பா பொறுமையாய் ஊட்டி விடுவார்.

“உனக்கு பசிச்சுதுன்னா தனியா தட்டுல போட்டு சாப்பிடேன்டி. எதுக்கு  அப்பாவை  தொல்லைப்  பண்ற…ஒரு  வாய்ன்னு  சொல்லிட்டு  மொத்த  தட்டையும்   காலி  பண்ணிட்டே  பாரு…”  என்று  கோபப்படும்  அம்மாவை  அப்பா  சமாதானப்படுத்துவார்.

“போகட்டும் விடு. சின்ன  குழந்தைதானே. அவ  சாப்பிட்டா  நான்  சாப்பிட்டமாதிரி…” என்பவருக்கு  காயத்ரியிடம்  எவ்வளவு  பிரியமிருந்ததோ அதே அளவு சிவாவிடமும் இருந்தது.

படிப்பை  முடித்ததுமே  சிவாவுக்கு  மும்பையில்  வேலை  கிடைக்க, அங்கு  சென்றவன்  உடன்  வேலைப்பார்க்கும்  பெண்ணை  காதலிக்க, அம்மா கொதித்து போனாள். ஆனால்  அப்பா  பதறவில்லை.

“மனசுக்கு பிடிச்சவளை விரும்பறதுல என்ன தப்பிருக்கு ? இப்படி கண்ணை கசக்கறதை  விட்டுட்டு கல்யாண  வேலைகளை  ஆரம்பி.  நானும் மேற்கொண்டு  ஆகவேண்டியதை  பார்க்கிறேன்” என்றார் வெகு இயல்பாய்.

அப்பா இலகுவானவர். அதனால்  பிரச்சனைக்கு  சுபமாக  முற்றுப்புள்ளி  வைத்தார். ஆனால்  சிவா நன்றி கெட்டவன் என்பதை நிரூபித்து விட்டான்.

அப்பாவுக்கு  அல்சைமர் என்று தெரிந்ததும் பதறியடித்து ஓடிவருவான்  என்று  காயத்ரி நினைத்திருக்க, அவனோ  அலைபேசியில்  நாலு  வார்த்தை  பேசியதோடு  முடித்துகொண்டான்.

“அப்பாவைப்பத்தி நினைக்கிறப்ப ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு காயத்ரி. ஆனா  நான்  உடனே  வந்து பார்க்க முடியாத  நிலைமையில  இருக்கேன். அமெரிக்கா  போக  ஏற்பாடு  பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்கு  நிறைய  மெனக்கெட  வேண்டியிருக்கு. அதனால  அவரோட  ட்ரீட்மெண்ட்டுக்கு  வேண்டிய  பணத்தை  உன்னோட  அக்கவுண்ட்டுக்கு  அனுப்பிடறேன். தப்பா  நினைச்சிக்காதே காயத்ரி….” என்றவன் மேலும் ஏதோ  கூற  முயல, காயத்ரி  பட்டென  தொடர்பை  துண்டித்தாள்.

‘அப்பாவுக்கு இப்படி என்று தெரிந்தும் அமெரிக்கா செல்ல  மனம்  வருகிறதென்றால்  அவனுடைய  மனநிலை எப்படிப்பட்டதாயிருக்கும்’

காயத்ரிக்கு  புரிந்தது.

“நாம அண்ணனோட போய் இருந்துடலாமாப்பா..?” என்று  அம்மா இறந்து  கொஞ்ச  நாட்களுக்கெல்லாம்  அவள் கேட்டபோது,

“வேண்டாம்மா…உனக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இங்கேயே இருப்போம். அதுக்கப்புறம்  நான்  அங்கே  போய்தானே ஆகணும்” என்ற  அப்பாவின் குரலில்  கவலை படர்ந்திருந்தது. அண்ணனின் குணம் தெரிந்துதான் அவர் அப்படி  சொன்னாரோ என்று  காயத்ரி  நினைத்துக்கொண்டாள்.

“கல்யாணமானாலும் நான் உங்க கூடவேதான் இருப்பேன். அதுக்க  ஒத்துக்கற  பையனாப்  பாருங்கப்பா…” என்று  அவள்  ஒருமுறை  சொன்னபோது  அப்பா  சிரித்தபடி,

“காலம் முழுக்க என்கூட  இருக்க முடியாதும்மா. நம்ம  சமூக  அமைப்பு அப்படி…”  என்றார்.

ஆனால்  அவர்  சொன்னது பொய்யாகிப் போனது.

காயத்ரி  மெல்ல  எழுந்து  வந்து  அப்பாவின் அருகில்  அமர்ந்து அவர்  கையை  எடுத்து  தன்  கைகளுக்குள்  பொதிந்து  கொண்டாள்.

“அண்ணன் ஒரு சுயநலவாதிப்பா… உங்க நிலைமை தெரிஞ்சும் அமெரிக்கா போகத்  துடிக்கிறான். அவன் உங்களுக்கு பையனாப் பொறந்திருக்கவே  கூடாது. உங்க  குணத்துல ஒரு  சதவீதம்  கூட  அவனுக்கு   இல்லை. நீங்க  உயிரை  மட்டும் வச்சிகிட்டு  ஜடமா  இருக்கீங்க. அவனோ  உணர்வுகளிருந்தும்  ஜடமாயிருக்கான். மனித  ஜடம். அவனுக்கு  நீங்க  எவ்வளவோ  மேல்ப்பா. உங்களுக்கு  நானிருக்கேன்ப்பா….”

காயத்ரி  பேசிக்கொண்டே  போனாள். அப்பா  அசையாமல்  அமர்ந்திருந்தார்.

நிறைவு..

.

.

ஐ.கிருத்திகா | இந்தியா

.

நன்றி : நடு இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More