Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறப்புச் சிறுகதை | ஏக்கம் | விமல் பரம்

சிறப்புச் சிறுகதை | ஏக்கம் | விமல் பரம்

5 minutes read

 

வணக்கம் லண்டன் இணையத்தின் முதலாம் ஆண்டு நிறைவையிட்டு சிறப்பு சிறுகதை (12/06/14)

 

அடுப்பில் கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. அது போல என் மனமும்  கொதித்துக்கொண்டிருந்தது.

“என்ன பிள்ளைகள் இவர்கள். அடிக்கடி வந்து பார்க்காட்டியும்….  வருத்தம், துன்பம் வாற நேரத்திலாவது வந்து பார்க்கவேண்டாமா……”

பக்கத்து வீட்டு ஐயாவை நினைக்க கவலையாகயிருக்கிறது. மூன்று மாதமாய், ஆஸ்பத்திரியும் வீடுமாக அலைந்துகொண்டிருந்தவர்,  இப்பொழுது படுக்கையில் இருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும் ஆசையில், அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

கிளிநொச்சியில் ஆசிரியராய் மதிப்பும் மரியாதையுமாய் இருந்தவர்.

“ஐயா” என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். அடுத்தவரின் துன்பம்  துயரங்களுக்கு ஆறுதலாகயிருந்து தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார். பிரச்சனையான காலங்களிலும் பிள்ளைகளின் படிப்புக்காக நிறைய கஷ்டங்களை அனுபவித்து, அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஐயாவின் மனைவி இறந்து ஐந்து வருடமாகிறது.

அவரின் இழப்பத்தாங்க முடியாமல் மிகவும் நொந்துபோனார். அம்மாவின் செத்தவீட்டுக்கு வந்த பிள்ளைகள் போகும் போது இருக்கும் சொத்துக்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு போனவர்கள் தான் பிறகு இங்கு வரவில்லை. தங்கள் பிள்ளைகளோடு வந்து சொந்தங்களோடு பழகிப் போனால்தானே, அவர்களுக்கும் ஊரைப்பற்றியும் சொந்த பந்தங்களைப் பற்றியும் தெரியும். தொலைபேசியில் தான் சுகம் கேட்டு கதைப்பார்கள். அதுவும் குறைவு. இப்பொழுது ஐயாவிற்கு எண்பது வயதாகிறது. உதவிக்கு ஒரு பெடியனை வைத்துக்கொண்டு வீட்டில் தனியாகயிருக்கிறார்.

gh

பக்கத்து வீட்டிலிருக்கும் எங்களுடன் முப்பது வருடப்பழக்கம். ஐயாவும் அம்மாவும் எங்கள் சந்தோசங்களிலும் துக்கங்களிலும் பங்கு கொண்டு  ஆதரவாகவும், ஆறுதலாகவும், இருந்திருக்கிறார்கள். இடப்பெயர்வுகளால்  படிப்புகள் குழம்பி  படிக்கப் போகமாட்டேனென்று, அடம்பிடித்த என் மகனை அதட்டி அடி போட்டு படிக்கவைத்த புண்ணியவான். இன்று உயர்கல்வி கற்கும் அவனுடன் படிப்புகள் பற்றியும் பொது விஷயங்கள் பற்றியும் கதைப்பார்.

வாசிப்பு மனிதனைப் பக்குவப்படுத்தும். புத்தகம், பத்திரிகை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று அதன் முக்கியத்தை உணரவைத்து, வாசிப்புப் பழக்கத்தை பழக்கப்படுத்தியவரும் அவர்தான். அவனும் தாத்தா என்று பாசத்தோடு பழகிவருகிறான்.

ஐயாவிற்கு வருத்தம் வந்ததிலிருந்து நானும் மகனும் அவரைப்பார்த்து வருகிறோம். கஞ்சி வெந்ததும் இறக்கி ஆறவைத்து பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஐயா வீட்டுக்குப் போனேன். மெலிந்து இயலாமையுடன் கண்களை மூடிக் கொண்டு, படுத்திருந்தவரைப் பார்க்க  வேதனையாகயிருந்தது.

 

” ஐயா ” என்று கூப்பிட்டேன்.

சிரமப்பட்டுக் கண்விழித்து என்னைப் பார்த்தார்.

“எழுப்புங்கோ ஐயா கஞ்சி குடிச்சிட்டுப் படுங்கோ”

“நெடுகவும் கஞ்சியோ” என்றபடி உதவிக்கு நிற்கும் பெடியனின் உதவியோடு எழுந்து கஞ்சியை குடித்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார்.

“பிள்ளைகள் கதைச்சவையே…… வாறது பற்றி ஏதாவது சொன்னவையே……”

என்று மெல்லிய குரலில் கேட்டார்.

வருத்தம் வந்ததிலிருந்து இதே கேள்வியைத்தான் கேட்கிறார்.

 

நேற்று ஐயாவின் பிள்ளைகள் கோபி, மீராவுடன் கதைத்தது நினைவுக்கு வந்தது.

“கோபி, ஐயாவுக்கு உங்கட நினைவுதான். உங்களையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க ஆசைப்படுறார். இப்ப அவருக்கும் மாறி மாறி வருத்தம் வருகுது. எத்தனை நாளைக்கு இருக்கப்போறார். ஒருக்கா வந்திட்டுப் போங்கோவன்”.

“அக்கா, நினைச்சவுடன வர ஏலாது. எனக்கும் பிள்ளைகளுக்கும் இப்ப லீவு எடுக்கிறது கஷ்டம்.

முயற்சி செய்து பார்க்கிறன்.” என்றான்.

மீராவும் இதையே தான் சொன்னாள். நான் இதை ஐயாவிடம் சொன்னபோது முகம் வாடினாலும் சமாளித்துக்கொண்டு,

“நினைச்சவுடன வாறது கஷ்டம் தானே…. பிள்ளை, லீவு எடுத்துக்கொண்டு ஆறுதலாக வரட்டும்…” என்றார்.

“சரி, ஐயா படுங்கோ நான் இரவைக்கு இடியப்பமும் சொதியும் வைச்சுக்கொண்டு வாறன்”

கஞ்சிப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

 

” தாத்தா எப்பிடியிருக்கிறார் அம்மா, நான் போய்ப் பாத்திட்டு வாறன்….”

மகன் சொல்லி விட்டுப் போனான். இவன் போய் கதைத்தால் அவருக்கும்

ஆறுதலாகயிருக்கும் என்று நினைத்தபடி இரவுச் சமையலைத் தொடங்கினேன்.

சமையலை முடித்துவிட்டு வெளியில் வந்தபோது, ஐயா வீட்டிலிருந்து வந்த மகன்,

“அம்மா, தாத்தாவுக்கு கோபி அண்ணை, மீராக்காவின் நினைவுதான். அவைகளைப் பற்றி கேக்கிறார். ஒருக்கா வந்து பாத்திட்டுப் போகலாமே…” என்றான்.

“நாங்கள் நினைச்சால் போதுமே, பிள்ளைகளும் நினைக்கவேணும்.

பக்கத்து வீட்டிலிருக்கிற எங்களுக்கு இருக்கிற துடிப்பு, பெத்தபிள்ளைகளுக்கு இல்லையே…..”. என்றேன்.

 

நாலுநாள் போனபின் ஐயா மீண்டும் பிள்ளைகளுடன் கதைக்கும்படி  சொன்னார். நானும் நாலைந்து தரம் அவர்களோடு கதைத்துவிட்டேன்.  அடிக்கடி எடுத்துக்கதைக்க என்ன சொல்லுவானோ என்று நினைத்தாலும்,   ஐயாவின் முகத்தைப் பார்த்ததும், அவருக்காக மீண்டும் எடுத்துக்  கதைத்தேன்.

“இன்னும் லீவு சரி வரேலை எடுக்கிறது கஷ்டமாயிருக்கு. நீங்கள் வடிவாய்ப் பாருங்கோ காசு வேணுமெண்டால் நாங்கள் அனுப்புறம்”

அவனின் கதையைக் கேட்க எனக்கு கோபம் தான் வந்தது. ஐயாவின் பென்சனும், வீட்டு வருமானமும்,

அவருக்குப் போதும். முன்பு கூட பிள்ளைகளிடம் காசு வாங்கியதில்லை. இப்ப அவருக்குத் தேவை, பிள்ளைகளின் அன்பும் அருகாமையும். இது ஏன்  இந்தப் பிள்ளைகளுக்கு விளங்குதில்லை.

இரண்டு கிழமை சென்றபின் ஐயாவின் உடலில் சற்று முன்னேற்றம் தெரிந்தது.

மெல்ல எழுந்து கதிரையிலிருந்து, தன்னைப்பார்க்க வருபவர்களோடு சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருப்பார். மகனின் கைத்தாங்களில்,  கொஞ்சத் தூரம் நடக்கவும் செய்வார்.

“தம்பி, படுக்கையில் கிடக்காமல் நடந்து திரிஞ்சு என்ர அலுவலைப் பாத்தால், உங்களுக்கும் கரைச்சல் இருக்காது…”. என்பார்.

அவரின் முயற்சியால் தானே நடந்து முற்றத்து, மாமரத்தின் கீழ் கதிரையில் இருக்கும் அளவிற்கு முன்னேற்றம் தெரிந்தது. நான் அவரைப் பார்க்கப்போனபோது

“பிள்ளை வாய்க்கு ருசியாய்ச் சாப்பிட்டு எத்தனை நாளாயிட்டுது. காரசாரமாய் சாப்பிடவேணும் போலிருக்குது….”.  என்றார்.

அவருக்குப் பிடித்த சோறும் மீன் குழம்பும் சமைத்துக்கொடுத்தேன்.

 

கொஞ்சமாய் சாப்பிட்டாலும் திருப்தியாய்ச் சாப்பிட்டார். மகனோடு  பத்திரிகைச் செய்திகள், புதினங்கள் பற்றியும் கதைத்தார். பழைய ஐயாவைப் பார்த்தது போல், எங்களுக்குச் சந்தோசமாகயிருந்தது.

தன் சுகம் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லச் சொன்னார். நானும் உடனே   சந்தோசத்துடன் அவர்களுடன் கதைத்தேன்.

“கோபி, ஐயாவிற்கு இப்ப சுகம். எழும்பிக் கொஞ்சத்தூரம் நடக்கிறார். உங்களைத்தான் ஆசையாய்ப் பாத்துக்கொண்டிருக்கிறார். இப்ப வந்தால் உங்களோடு, பிள்ளைகளோடு கதைச்சு சந்தோசமாயிருப்பார்”. என்றேன்.

உடனும் பதில் வரவில்லை. சிறிது அமைதிக்குப்பின்

“அக்கா அப்பாவிற்கு இப்ப சுகம் தானே. நிம்மதியாயிருக்கு. நாங்களும் உடன வரத்தேவையில்லை. ஆறுதலாய்ப் பாத்து வாறம்” என்றான்.

“என்னடா இப்பிடிச் சொல்லுறாய்.” என்றேன் மனத்தாங்கலுடன்.

“எங்களுக்கும் வர ஆசைதான். வசதியும் வரவேணுமே. உங்கையிருந்து சொல்லுறது சுகம்.. இங்கைவந்து பாத்தால்தான் தெரியும்” அவன் குரலில் சிறிது கோபம் எட்டிப்பார்த்தது.

“சரி உன் வசதிப்படி செய்” தொலைபேசியை வைத்துவிட்டேன்.

“இனி உவனோடு கதைக்கேலாது. விரும்பியபடி செய்யட்டும்.” என்று முணுமுணுத்தபடி ஐயாவைப்பார்த்தேன். அவரும் என்ன நினைத்தாரோ  ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அவரின் வாடியமுகத்தைப் பார்க்க கவலையாகயிருந்தது.

 

நானும் மகனும் ஒவ்வொரு நாளும் அவரைப்போய் பார்த்து, விரும்பிய சாப்பாடுகள் செய்து கொடுத்து கவனித்து வந்தோம்.

இன்று அவரைப் பார்க்கப்போன போது, சோர்வாகக் கட்டிலில் படுத்திருந்தார்.

சாப்பிட மனமில்லை என்று அவர் சொன்னதால், சூப் வைத்து மகனிடம் கொடுத்துவிட்டேன்.

மத்தியானம் சமைத்துக்கொண்டிருந்தபோது மகனின் பதறிய குரல் கேட்டது.

“அம்மா ஓடி வாங்கோ. தாத்தா மூச்சு விடமுடியாமல் கஷ்டப்படுறார்.”

பதறியடித்துக்கொண்டு ஓடினேன். நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வேதனையில்துடித்துக்கொண்டிருந்தார்.

“தம்பி காரைப்பிடி உடனும் ஆஸ்பத்திரிக்கு போவம்”

காரில் போய் இறங்கும்போது ஐயா கண்களை முடி தலை சரிய படுத்திருந்தார்.

எனக்கு விளங்கி விட்டது. அதையே அவர்களும் சொன்னார்கள்.

சுகமாகி வாறார் என்று நினைக்க இப்படியாகி விட்டதே என்று நெஞ்சு பதறியது.

பிள்ளைகளுக்கு அறிவிக்கவேணுமே என்று நினைத்தேன். பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளைப் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டார்… பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்…. நினைக்க தாங்கமுடியாத கவலையாக  இருந்தது. தொலைபேசியை எடுத்து நம்பரை அழுத்தினேன்.

கோபி தான் எடுத்தான்.

“கோபி, திடீரென்று ஐயா மூச்சுவிடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தம். ஆனால் காப்பாத்த முடியேலை. பத்து மணிக்கு சீவன் போட்டுது.” என்றேன்.

“சுகமாயிருக்கிறார் எண்டு சொன்னீங்கள்…….”.  என்று இழுத்தான்.

“என்ன செய்யப்போறியள். நீங்கள் வாறது பாத்துத் தான் இங்க ஒழுங்கு செய்ய வேணும்.” என்றேன்.

“கொஞ்சம் பொறுங்கோ மீராவோடு கதைச்சிட்டு சொல்லுறன்” என்று கட்  பண்ணினான்.

 

இருபது நிமிடத்திற்குப் பிறகு எடுத்து,

” அக்கா, எல்லாம் முடிஞ்சுது. இனி நாங்கள் வந்து என்ன செய்யிறது,    அவர் என்ன எங்களைப் பார்க்கவே போறார். மீராவுக்கும் வர முடியாதாம்.   நீங்களே பாத்து அவரின் கடைசிக் காரியத்தையும் செய்து விடுங்கோ….”. என்றான்.

என்ன சொல்கிறான் இவன்…..எனக்கு ஒன்றும் விளங்கவில்லை….!

பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்த, கண்களின் ஒளி இழந்து…… தலை சரிய….. ஒடுங்கி எலும்புக்கூடாய் படுத்திருக்கும் ஐயாவை நினைக்க நெஞ்சு வலித்தது.

“ஐயாவிற்கு கொள்ளி வைக்க நீதானே வரவேணும்.” பதறிப்போய்   கேட்டேன்.

“நாங்கள் வாறது கஷ்டம்…எங்களை எதிர்பாக்காதேங்கோ… நீங்கள் பாத்து செய்யுங்கோ….”

அடக்கிவைத்த அழுகை வெடித்துக்கொண்டு வெளியே வந்தது.

“பிள்ளைகள் இருந்தும் உங்களை அனாதைப் பிணமாய் விட்டிட்டினமே….ஐயா.”

தாங்கமுடியாமல் வாய்விட்டு அழத்தொடங்கினேன்.

 

“அம்மா தாத்தாவை அனாதைப் பிணம் என்று சொல்லாதைங்கோ. நானும் அவருக்குப் பேரன்தானே. நான் வைக்கிறன் கொள்ளி நீங்கள் அழாதேங்கோ…..”

என்னை அணைத்து ஆதரவாகச் சொன்ன மகனை கண்களின் நீர் வழிய நிமிர்ந்து பார்த்தேன்.

 

– விமல் பரம் – 

 

 

ஓவியங்கள் | இந்து : கனடா 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More