செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சங்க இலக்கியப் பதிவு – 56 |  நடுகல்லின் நாயகர்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 56 |  நடுகல்லின் நாயகர்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

10 minutes read

போரில் இறந்த வீரர்களைப் போற்றி அவர்களின் தியாகத்தை வணங்கும் வகையில் அவர்களின் பெயரும் பெற்ற வெற்றியும் அவர்களது பெருமைகளையும் பொறித்து கல் நட்டு வணங்கும் மரபு இருந்து வந்திருக்கிறது. நடுகல்லை வீரக்கல் என்றும் அழைத்திருக்கிறார்கள். தொல்காப்பியர் காலத்திலிருந்தே இந்த மரபு இருந்து வந்துள்ளது.

நடுகல் பற்றிப் பல குறிப்புகள் சங்க இலக்கியப் பாடல்களில் நாம் காணக்கூடியதாக உள்ளது. புறநானூறு 221, 223, 232, 260, 261, 263, 264, 265, 306, 314, 329, 335, அகநானூறு 35, 53, 67, 131, 179, 211, 289, 297, 343, 387, 352, பட்டினப்பாலை 79, மலைபடுகடாம் 388, 395, ஐங்குறுநூறு 352 போன்றவைகளில் நடுகல் பற்றிய பல குறிப்புகளையும், அதன் வழிபாட்டு மரபினையும் நாம் காணலாம். இந்தப் பதிவில் சங்க இலக்கியப் பாடல்கள் வழி நமது நடுகல் வழிபாட்டுப் பண்பினை ஆய்ந்து நோக்கலாம்.

சங்க இலக்கியங்கள் எழுதுவதற்கு இலக்கணமாக அமைந்ததும் அவற்றுக்கு முற்பட்டதுமான நூல் தொல்காப்பியம். இது எழுதப்பட்ட காலம் கி.மு 300 என்று வரையறுக்கின்றனர்.

இந்த தொல்காப்பியத்தில் நடுகல் வைக்கும் முறையைத் தொல்காப்பியர் முன்வைக்கின்றார்.

காட்சி, கால்கோ ணீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்

என்கிறார். அதாவது

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்து

என்று நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளைக் குறிக்கின்றார்.

அன்று இந்த நடுகல் வழிபாடே சிறப்புற்ற வீரர் வணக்கமாக இருந்தது என்பது தொல்காப்பியர் விரிவாகக் கூறுவதால் நன்கு விளங்குகின்றது.

காட்சி- சரியான பொருத்தமான கல்லைத் தேர்ந்தெடுத்தல்.

கால்கோள்- தேர்ந்தெடுத்த கல்லை வீரன் இறந்த இடத்துக்குக் கொண்டு வருதல்.

நீர்ப்படை – அந்தக் கல்லை நீராட்டி, நறுமணப் பொருட்களால் மஞ்சனமாட்டித் தூய்மைப்படுத்துதல்.

நடுதல்- இடத்தைத் தெரிவு செய்து தூய்மைப்படுத்திய கல்லில் வீரனுடைய பெயரைச் செதுக்கி, அதை நடுவது நடுதல் எனப்படும்.

பெரும்படை- நட்ட கல்லிற்கு பெரும்படையல் இட்டு வழிபடுவது ஆகும்.

வாழ்த்து – அந்தக் கல்லினைத் தெய்வமாகத் தொழுது அந்த வீர மறவனின் புகழினை போற்றி வாழ்த்துவது ஆகும்.

ஆகத் தொல்காப்பியம் முதற் கொண்டு வீர மரணம் அடைந்த மாவீரரைத் தெய்வமாக வணங்கும் தமிழர் மரபினை அவரின் ஆறு வழிபாட்டு முறைகளின் மூலம் நாம் உறுதி செய்யக் கூடியதாக இருக்கின்றது.

ஒரு நாட்டின் மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவி பகைவருடைய கால்நடைகளைக் கவர்வானா இது வெட்சித் திணை எனப்படும். இதில் ஈடுபட்டவர்கள் வெட்சி மலர்களைச் சூடுவர். இந்த முயற்சியை எதிர்த்து நிற்பது கரைந்தைத் திணை எனப்படும். அவர்கள் கரந்தை மலர்களைச் சூடி தமது கால்நடைகளை மீட்டு எடுப்பார்கள். பின்பு அந்த நாட்டின் மீது படையெடுப்பு நடைபெறும். அது வஞ்சித்திணை எனப்படும். அந்த படையெடுப்பை எதிர்த்து நிற்ப்பது காஞ்சித் திணை எனப்படும். கோட்டையை முற்றுகை இட்டு நிற்பது உழிஞைத் திணை எனப்படும். கோட்டைக்குள் இருந்து எதிர்ப்பது நொச்சித் திணை எனப்படும். கோட்டைக்கு வெளியே வெட்ட வெளியில் நடைபெறும் கடும்போர் தும்பைத் திணை எனப்படும். போரில் வெற்றி பெறுவது வாகைத்திணை எனப்படும். ஒவ்வொரு திணைச் செயலிலும் ஈடுபட்ட வீரர்கள் அந்தத் திணைக்குரிய மலர்களை அணிந்து கொள்ளுதல் மரபு.

இந்தப் போர்களில் தம் வீரத்தை காட்டிய சிறந்த வீரர் பாராட்டுக்குரியவர் ஆவார். தனது படை சிதறியோடுகின்றது. உடனே ஒரு வீரன் பகைவர் முன் தோன்றி பகைவரை தாக்கி அழித்து இறுதியில் பகைவர் தாக்குதால் மடிகின்றான். இத்தகைய வீரத்தை அவனைச் சேர்ந்த அரசனும் மற்ற வீரரும் பாராட்டுவார்கள். அவன் இறந்த இடத்தில் அல்லது அவன் உடலை எரித்த இடத்தில் அவனது வீரத்துக்கு அறிகுறியாக ஒரு கல்லை நடுவர். அந்தக் கல்லில் அவனது உருவம் பொறிக்கப்படும். அந்த உருவத்தின் கீழ் அவன் பெயரும் வீரச் சிறப்பும் குறிக்கப்படும். இவ்வாறு நடப்படும் கல் முன்பு கூறியபடி நன்கு தேர்ந்து எடுக்கப்பட்டு நீராட்டப்படும். அக்கல்லின் மீது மயிற்பீலியும் பூக்களும் சூட்டப்பட்டு பெரும் படையல் இட்டு வணங்குவர்.

தொல்காப்பியர் குறிப்பிடும் ஆறு படிநிலைகளில் ஒன்றான பெரும் படையல் நிலையை அகநானூறு 35 இல்,

“நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து

தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்”

என அம்முவனார் எனும் புலவர் பாடுகின்றார். அதாவது காதலனுடன் சென்ற தன் மகளை நடுகல் தெய்வம் காப்பாற்ற வேண்டும் என்கிறாள். நடுகல் தெய்வத்தை வேண்டி அத் தெய்வம் மீது கட்டப்பட்ட மணி அல்லது ஆபரணம் நடுகல் கடிகை எனப்படும். அந்த நடுகல் கடிகை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அங்கு நடுகல் தெய்வத்தை உடுக்கு அடித்து வழிபடுவர். துரூஉ எனும்செம்மறி ஆட்டைப் பலி கொடுப்பர். அந்த வழியூடாக மகள் செல்கிறாள் எனப் புலவர் பாடுவதாக அது அமைந்துள்ளது. நம் முன்னோர் தாம் உண்பதையே இறைவனுக்கும் படைத்து வந்தனர். அது போலவே இறந்த மக்களுக்காக நடுகல் நட்டு இறைவனாக நினைத்து தோப்பிக் கள்ளைப் படைத்து மயில் தோகை சூட்டிப் படையல் செய்து வழிபட்டு வந்திருக்கின்றனர்.

புறநானூறு 261 ஆவூர் மூலங்கிழார் பாடுவதாவது,

“நிரை இவண் தந்து நடுகல் ஆகிய”

என பாடுகின்றார். ஆநிரைகளை (அதாவது போர் தொடங்கும் முன் எதிரி நாட்டுச் செல்வமான பசுக்களை போய்க் கவர்ந்து வருவர். அந்தப் பசுக்களை மீண்டும் போய் மீட்டுத் தருபவனே ஆநிரை மீட்டவன் ஆவான்.) மீட்டுத் தந்தவன் நடுகல் ஆகிவிட்டதால் அந்த மண்ணே தனிமைப்பட்டு கிடக்கின்றது என்று புலவர் கவலையோடு பாடுகின்றார்.

இன்னொரு புறநானூற்றுப் பாடல் 223 இல் பொத்தியார் எனும் புலவர்,

“நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்

இடம் கொடுத்து அழிப்ப”

என கோப்பெருஞ்சோழன் சோழன் பற்றிப் பாடுகின்றார். என் நண்பன் கோப்பெருஞ்சோழன் நடுகல் ஆன பின்னரும் எனக்காக தனக்கருகில் விலகி இடம் கொடுத்தான். அவன் பலருக்கு வாழ்க்கை நிழலைத் தந்து வாழ்ந்தவன். உலகம் புகழ வாழ்ந்தவன் இந்தப் பெருவாழ்வை தொடர்ந்து நடத்த முடியாமல் வடக்கி ருந்து கல்லானவன் எனப் பாடுகின்றார்.

சோழன் இறந்த பின்பு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்த பிசிராந்தையாருக்கு நட்பின் காரணமாக அருகிலேயே இடம் அளித்தான் என வருகின்றது.

கோப்பெருஞ்சோழன் தன் மக்களால் ஏற்பட்ட பழிக்காக வடக்கிருந்தான். சோழனை நேரில் காணாமலேயே நண்பராக இருந்த பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததைக் கேள்வியுற்று அதே இடத்துக்கு வந்து அவருக்காக சோழன் விட்டிருந்த இடத்தில் வடக்கிருந்தார். இன்றளவும் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு எம்மிடையே பேசப்படுகின்றது .

இந்த “வடக்கிருத்தல்” என்பது ஏதாவது காரணத்திற்காக உயிர் துறக்கத் துணிந்து தூய இடம் சென்று வடக்கு நோக்கி இருந்து உணவு முதலியவற்றைத் துறந்து கடவுளின் நினைவோடு உயிர் விடுவது ஆகும். வடக்கிருந்த பல முன்னோர்களுக்காக நடுகல் நட்டு மக்கள் வழிபட்டது பற்றி பல பாடல்கள் வழி நாம் காணலாம்.

புறநானூறு 306 இல் அள்ளூர் நன்முல்லையார் என்பவர் வெற்றியைக் கொண்டாடும் வாகைத் திணையில் உள்ள “மூதின் முல்லைத்” துறையில் மறக்குலப் பெண்களின் வீர வாழ்வியலைக் கூறுகின்றார்.

நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது

விருந்து எதிர் பெறுகதில் யானே!

எனப் பாடும் வாயிலாக, மறக்குல இளையவள் ஒருத்தி, போருக்குச் சென்ற அவள் கணவன் விரைந்து பெரும்பகை ஒழித்து வரவேண்டும் என்றும், அவ்வாறு வெற்றி பெறுவதற்கு தன் கணவருக்கு போர் செய்யப் பகை அரசர்கள் உருவாக வேண்டும் என்றும் வேண்டுகின்றாள். தனது இல்லத்திற்கு இடையறாது தொடர்ந்து விருந்தினர்கள் வரவேண்டும் எனவும் நாள் தோறும் தனது குடியின் முன்னோரின் நடு கற்களை இறைவனாக நினைத்து வழிபட்டு வருகின்றாள். இல்லற வாழ்வில் இருக்கும் போது தான் விருந்தினர்கள் வருவார்கள். இதையே சிலப்பதிகாரத்தில், கோவலன் மாதவியுடன் வாழ்ந்து விட்டுக் கண்ணகியிடம் திரும்பி வந்தபோது, கண்ணகி கூறுவதாவது,

“நீ இல்லாததால் என்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்பதே எனது கவலை” என வருந்துவதாக வருகின்றது. இவ்வாறாக எந்த காரியத்துக்குச் சென்றாலும் எந்த வேண்டுதல் என்றாலும் நடுகற்களை மக்கள் வணங்கி வந்திருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.

ஐங்குறுநூறு 352 இல் ஓதலாந்தையார் பாலைத் திணையில் இருத்தலும் இருத்தல் நிமித்தத்தில் பாடுகின்றார்.

விழுதுத்துடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

எழுத்துடை நடுகலன்ன விழுப்பிணர்ப்

என்று பாடுவதன் வாயிலாக, அம்பு தொடுக்கும் சிறந்த ஆற்றலுள்ள வீர மறவர்கள், தமது அம்பு தொடுத்தல் போரினால் உயிரிழந்தார்கள். அவர்களின் பீடும் (பெருமை அல்லது வீரம்) பெயரும் எழுதிய எழுத்தை உடைய நடுகல்லைப் போன்ற சிறந்த சருச்சரை பொருந்திய பெரும் கையினைக் கொண்ட யானை எனப் படுவதன் மூலம் வீரர்களின் பெருமை கொண்ட வீரமும் பெயரும் நடு கல்லில் பொறித்து வழிபட்டு வந்தமை தெரியவருகின்றது. இதை மெய்ப்பிக்கும் முகமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் நடுகற்கள் தொல்லியல் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அதுபோலவே மலைபடுகடாம் 390 இல்

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட கல்

என வருகின்றது.

பகைவர்கள் போரில் புறமுதுகிட்டு ஓடினார்கள். அப்போது தங்கள் உயிரைக் கொடுப்பதற்கு நாணம் இல்லாத மானமுடைய வீரர்களின் நல்ல புகழுடைய பெயர்களை எழுதி நட்டின கற்கள் இருக்கின்றன. இன்பம் கொடுக்கும் தாளத்தை உடைய உங்கள் பாட்டை அந்த நடுகல் கடவுள் விரும்புமாறு பாடுங்கள். பண்டைய மரபுப்படி நடுகல் தெய்வத்துக்கு முன்னால் உங்கள் யாழை இசைத்து வணங்கி விரைந்து செல்லுங்கள் என்று வருகின்றது.

இதே மலைபடுகடாம் நூலில் 395 ஆவது அடியில்

கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த

கடவுள் ஓங்கிய காடு

என்று வருகின்றது. நீங்கள் செல்லும் வழியில் இன்னவாறு உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மறவன் இவன் என அவனது பெயரை உலகம் அறியும்படி கல்லைச் செதுக்கி அதன் மீது பொறிக்கப்பட்டிருக்கும். நல்ல அடிப்பாகத்தை கொண்ட மரா மரங்களின் நிழலில் இருக்கும் தெய்வத்தன்மை மிகுந்த நடுகற்கள் இருக்கும் காடுகள் அவை என வருகின்றது.

இந்த சங்க இலக்கியப் பாடல்களை உறுதிப்படுத்தும் முகமாக கி.மு 3ஆம் நூற்றாண்டு கால சங்ககால நடு கற்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில்,

“வேள் ஊரைச் சார்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்கு எடுக்கப்

பெற்ற நடுகல்”

எனத் தமிழி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்ட இடம் புலிமான்கோம்பை, தேனி மாவட்டம் ஆகும். இங்கு பல சங்ககால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஒரு சொல் “ஆகோள்” என்பது. வெட்சித் திணையில் போருக்கு செல்வதற்கு முதல் எதிரி நாட்டின் பசுக்களை (ஆநிரை) கவர்ந்து வருவதும் மீட்டலும் ஆகும்.

சங்ககாலத்திலும் அதற்கு முன்பும் ஆகோள் பூசல் தொடர்ந்து நடைபெற்றது. ஆகோள் பூசலில் ஈடுபட்டு வீரங்காட்டிய மறவர்களின்

நடுகற்கள் இருந்திருக்கின்றன.

கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டில்,

கூடல் ஊர் ஆ கோள்

என்று எழுதப்பட்டுள்ளது

இது போலத் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் சங்ககால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வீரர்களுக்கு என்று மட்டுமல்ல, விலங்குகளுக்கும் கூட நடுகற்கள் அன்று அமைத்திருக்கின்றார்கள். மக்களுக்காக வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் தியாகத்தைப் போற்றி

நன்றி மறவாப் பண்பு கொண்ட தமிழர்கள், நடுகல் அமைத்து வழிபட்டனர்.

வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் வேட்டை, ஆநிரை (பசுக்கள் )கவர்தல், ஆநிரை மீட்டல், போன்றவற்றில் வீரமரணம் அடைந்தவர்களுக்காகவும் சிறுபாதைகளிலும் வண்டிப் பாதைகளிலும் கூட நடுகல் நாட்டி எமது மக்கள் வழிபட்டிருக்கிறார்கள்.

நடுகற்களுக்கு நாள்தோறும் தீபம் ஏற்றிப் பூசை செய்து வழிபட்டு இருக்கின்றனர். நெய் விளக்கேற்றி படையல் செய்திருக்கின்றார்கள். வேங்கை மரத்தின் பூக்களை பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலை மாலை சூட்டி நடுகற்களை வணங்கி வந்திருக்கின்றார்கள் எனப் புறநானூறு கூறுகின்றது. மரல் (ஒரு கத்தாழை வகை) நாரில் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியையும் ( பூக்களை வைத்துத் தொடுக்கும் பூ மாலை) அழகிய மயிலினது பீலியையும் ( தோகை) சூட்டிப் பெயரும் பீடும் (பெருமை) எழுதிப் பெருமை செய்து வழிபட்டு இருக்கின்றார்கள் என்று மலைபடுகடாம் கூறுகின்றது.

சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டத்தில் சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நாட்டிய நிகழ்வு நடுகல் காதையில் விபரமாகக் கூறப்படுகின்றது.

அகநானூறு 86 இல் மணமக்களுக்கு நெல்லும் பூவும் தூவி வாழ்த்தியது போலவே, நெல்லும் பூவும் தூவி வீரமறவர்களுக்குப் பிடித்தவற்றைப் படைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

தாம் நினைத்தது கைகூடவும் நல்வாழ்வுக்காகவும் மழை வேண்டியும் கூட இவர்கள் நடுகற்களை வணங்கி இருக்கிறார்கள். இன்றும் இறந்த எம் முன்னோரைத் தெய்வமாக வழிபட்டே நாம் காரியங்களைத் தொடங்குகின்றோம்.

எமது மண்ணிலும் சங்கத்தமிழனின் வீரக் கற்களையும் இன்றைய மறவரின் நடுகற்களையும் பூமித்தாய் தாங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளிடமே தொன்மையும் தொடர்ச்சியுமான நமது வீர வரலாறு புதைந்து கிடக்கின்றது.

சங்க கால நடுகல் வழிபாட்டு மரபு மாறாது, இப்போதும் அதே வழி வந்த நாம் நடுகற்களை நாட்டி வீர மறவர்களின் தியாகத்தை நினைந்து நன்றியோடு வழிபடுகின்றோம்.

எமது தாய் மண்ணில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வீர மறவர்களுக்கான நடுகல் வழிபாட்டு மரபு இருந்து வந்தது.

இலங்கை அரசு பகை மனம் கொண்டு அகோரத் தனத்தோடு அனைத்து நடுகற்களையும் அழித்து விட்டாலும் சங்கத் தமிழன் வழி வந்த எம் நெஞ்சில் இருந்து அந்த மறவர்களை அழிக்க முடியுமா? அல்லது எம் உயிரோடு கலந்த அந்த நடுகற்களை, நடுகல் வழிபாட்டை பெயர்க்கத் தான் முடியுமா?

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 55 | சங்கத் தமிழன் எனத் தோன்றும் சிகைக்கொற்றன் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 54 | சங்க காலத்தில் ஆதன் எனும் பெயர் கொண்ட வீரமறவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-53 | சங்க கால மக்களும் மரங்களும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு -52 | சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு -51 | சங்க காலத்தில் கூத்து | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

புகைப்படம்:  ஆரூர் ஆலபுரம் நடுகல் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.