செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

6 minutes read

 ஏறு தழுவுதல் என்ற எமது பழந்தமிழர் வீர விளையாட்டு சங்காலம் தொட்டு எம்முடன் தொடர்ந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த விடையம் ஆகும். இந்த மறமாண்பை எந்தெந்த இலக்கியங்களினூடு நாம் அறியக் கூடியதாக இருக்கிறது என்பதையும் அது எவ்வாறெல்லாம் நடை பெற்றது எனவும் இந்தப் பதிவினூடு காணலாம்.

சங்க இலக்கியங்களில் இதனைக் கொல்லேறு தழுவுதல், ஏறு கோடல், அடலேறு கொள்ளல், புகரேறு தழுவுதல் எனவெல்லாம் குறிப்பிடுகின்றனர். இது முல்லை நிலத்துக்குரிய வீர விளையாட்டு ஆகும். முல்லை என்பது காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். இந்நிலத்து ஆயர்களின் வாழ்வியல் என்பது, ஆடவர் ஆநிரை மேய்ப்பதற்கு பகல் பொழுது எல்லாம் காட்டினுள் செல்வதும், மகளிர் பாற்பொருட்களைக் கொண்டு போய் விற்று வருவதும் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் மரபும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் முல்லைத் திணையின் சிறப்பான அம்சங்களாக உள்ளன. இதனால் அக உணர்வான காத்திருத்தல் இயல்பாக, இருத்தலையும் இருத்தல் நிமித்தத்தையும் இதற்கு உரிமையாக்கியுள்ளனர்.

முல்லை நிலத்தின் தொழிலாக சாமை மற்றும் வரகு விதைத்தல், ஆநிரை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடல், கான்யாற்றில் ஆடல் (காட்டாற்றில் ஆடல்) போன்றவை இருக்கின்றன. இந்த ஏறு தழுவுதல் பற்றி கலித்தொகையில் முல்லைக் கலி என்னும் பகுதியில் நல்லுருத்திரனார் பாடியுள்ளார். முல்லைத் திணையில் 17 பாடல்கள் இவர் பாடியுள்ளார். இதில் 7 பாடல்களில் ஏறுதழுவுதல் பற்றி விபரமாகக் காட்சிப்படுத்துகின்றார்.

கலித்தொகை
முல்லைக்கலி – 101
ஒரு நாள் உறவாவான்

ஆயர் இளைஞர்கள் தாம் விரும்பும் கன்னியரைப் பெறும் பொருட்டு குறித்த ஏறுகளைத் தழுவுகின்றனர். இளமகளிர் தமக்குள் ஆவலுடன் உரையாடுகின்றனர். முல்லை மற்றும் வேறு நிலப் பூக்களான கோடல், குருந்தம், முல்லை கொன்றை, காயா, வெட்சி, பிடவம் கஞ்சங் கொல்லை போன்ற பூக்களை அழகுறத் தொடுத்து கண்ணியாகச் (மாலையாகச்) சூடிய இளைஞர்கள் வருகின்றனர். கொம்புகள் சீவப்பட்ட ஏறுகள் நிற்கின்ற தொழுவினுள், பகையோடு வரும் ஏறுளைத் தழுவ ஒருங்கே சென்று புகுந்தனர். அந்த இடத்தில் இடியென ஆரவாரம் எழ ஏறுகள் முக்காரமிட்டு (எருவின் முழக்கம்) நிற்கின்றன. “ஏறு தழுவியவர்க்கே மகளைத் தருவோம்” என்ற ஆயர் குல வழக்கப்படி ஏறுதழுவ முன் வருகின்றனர். மகளிர் திரண்டு நிற்கின்றனர். மரங்களிற்கு கீழும் நீர்த் துறையிலும் உறையும் தெய்வங்களை வழிபட்டு விட்டு காளையர் சீறிப் பாய்ந்தனர். ” ஏறு கொள்ள வல்லார் என்னைப் போன்றவர் இலர்” என்று கூறும் ஒருவன் நமக்கு ஒரு நாள் உறவாவான், எனத் தோழி தலைவிக்கு கூறுவதாக இப்பாடல் வருகின்றது. இந்த 50 அடிகள் கொண்ட பாடல் அப்படியே ஏறு தழுவுதல் விளையாட்டை விபரித்துக் காட்சிப் படுத்துகின்றது.

கலித்தொகை – 102
ஏறு தழுவி வென்றவன்

தலைவனும் பாங்கனும் (தோழன்) இவ்வாறு பேசிக் கொள்கின்றனர். “பிடவமும், முல்லையும், தோன்றியும், கொன்றையும் என பல பூக்களால் மாலை அணிந்திருக்கிறாளே? அவள் யார்?” எனத் தலைவன் கேட்கின்றான். “ஓ அவளோ! இவளுடைய கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெறுபவர் அல்லாத பிறர் இவளை தீண்டத்தக்கவர் அல்லர் என்று பறையறைந்து அறிவிக்கப்பட்டவள்” என்கிறான் பாங்கன். அதைக் கேட்ட தலைவன் கூறுவதாவது “யான் அந்தக் கொல்லேற்றைத் தழுவ முன் வந்தேன் என்று அவளது பெற்றோரிடம் சென்று சொல்” என்று வருகின்றது. இது ஒரு நாடகப் பாணியில் அமைந்துள்ளது. அதன் பின்னர் அவன் அந்த ஏற்றினைத் தழுவி வெற்றி பெற்றுத் தண்ணுமைப் பறை அடித்து பல பூக்களால் ஆன கண்ணி அணிந்து வர அனைவரும் குரவைக் கூத்து ஆடி மகிழ்ந்தனர்.
இதில் கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் ஆயர் பெண்கள் ஒரு போர் வெறி கொண்ட எருதினை வளர்ப்பார்கள். அதைப் பெண் கேட்க விரும்பும் ஆடவன் அடக்க வேண்டும்.

கலித்தொகை – முல்லை கலி -103 ஆயமகள் தோள்
75 அடிகள் கொண்ட இந்தப் பாடலில் ஆண்கள் பல பூக்களால் கண்ணிகள் சூட்டித் தொழுவிற்குள் வர, “கட்டுக்கடங்காத வேகத்துடன் வரும் காளைகளைப் புரட்டுபவர்களளைப் பாரடி!” எனத் தலைவி தோழிக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. “கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை மறுமையிலும் ஆயமகள் தழுவ மாட்டாள்”. இப் பிறவியில் அல்ல மறு பிறப்பிலும் திருமணம் செய்ய மாட்டாள் என்ற செய்தியும் வருகிறது. பின்னர் வெற்றியைக் கொண்டாட குரவைக் கூத்து ஆடி அனைவரும் மகிழ்ந்தனர்.

கலித்தொகை 104 இல், 80 அடிகள் கொண்ட பாடலில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியைக் காட்சிப்படுத்தும் புலவர், “ஏறு குத்த வரும் கொம்பை மார்பு கொடுத்து ஏற்றுக் கொள்பவர் சிலர், கொம்பின் மேலே பாய்ந்து ஏறுபவர் சிலர், கொம்பினிடையே புகுபவர் சிலர், எனத் தொழுவில் நிற்கும் இளைஞர்களைக் காட்டி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த பாரதப் போர்க்களம் போல அந்தத் தொழு பயங்கரமாக இருந்தது என்கின்றார்.

கலித்தொகை 105 ஆவது பாடலில் 75 அடிகள் இருக்கின்றன. இந்தப் பாடலில் பாண்டியன் மன்னன் சிறப்புற வாழ வேண்டும் என வணங்கி பாண்டி நாட்டு குடியினரான ஆயர் ஏறுதழுவல் விளையாட்டினை ஆரம்பிக்கின்றனர். “பக்கத்தில் செல்ல அஞ்சும் செவலை, செங்காரி, வெள்ளையைப் பாரடி!” எனத் தோழி தொழுவில் நடக்கும் நிகழ்ச்சிகளை கூறினாள். இதே செவலை, செங்காரி, வெள்ளை என்ற பெயர்களை பசுக்களுக்கும் எருதுகளுக்கும் இன்றும் நாம் பெயர் சூட்டி மகிழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே கலைத்தொகை 106 இல் ஐம்பது அடிகள் கொண்ட பாட்டினில், ஆயர் மகளிர் “கொல்லேறு தழுவி வரும் இளைஞனே எமக்கு ஏற்றவன்” எனக்கூறி அதுபற்றி உரையாடி மகிழும் இனிய காட்சிகளைக் காணலாம். தொடர்ந்து கலித்தொகை 107 இல், 35 அடிகள் கொண்ட இந்தப் பாடலில் ஏறு தழுவலிலே அவன் பூ, தன் கூந்தலில் வந்து விழ அதனை எடுத்து தன் கூந்தலில் முடித்துக் கொண்டாள் ஒருத்தி. தாய் ஏசுவாளோ என்ற பயம் வர தோழியிடம் இது பற்றி பேசுகின்றாள். ஒரு உரையாடலாக இப்பாடல் வருகின்றது. இந்த ஏறு தழுவுதல் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் பெரும்பாணாற்றுப் படையிலும் சில குறிப்புகள் வருகின்றன.

நமது இலக்கியங்களிலுயும், வரலாற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளது இந்த ஏறு தழுவுதல் விளையாட்டு ஆகும். அன்று காளையைத் துன்புறுத்தாது நன்றாக உணவு கொடுத்து நல்ல முறையில் வளர்த்து ஏறுதழுவுவதற்கு கொண்டு வருவர். காளை வென்றாலும் தோற்றாலும் அதற்கு எந்தத் துன்பமும் நிகழவில்லை. அன்று மிருகங்களுக்கு என்றும் அறம் இருந்தது. வயதான ஆநிரைகளை, இறக்கும் மட்டும் ஒரு புல் தரையில் வைத்துப் பராமரிப்பார்கள் என்ற குறிப்பு சங்க இலக்கியங்களில் உள்ளன. இன்று ஆநிரைகளுக்கு எதிராகப் பல வதைகள் நடந்தேறிக் கொண்டிருந்தாலும் இந்த ஏறு தழுவுதல் என்பது மிருகவதை என ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.
இந்தக் காளையுடனான போர் வேறு விதமாக சில நாடுகளில் குறிப்பாக ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

அன்று சங்கத்தமிழன் எந்த ஒரு வதையும் செய்யாது மற மாண்போடு விளையாடிய இந்த வீர விளையாட்டு எமது வாழ்வியல் தொன்மங்களில் ஒன்று. இது மாறாத ஒழுக்கத்துடனே நீட்சி பெற வேண்டும்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More